Tamilnadu

தமிழ்நாட்டில் முதல்முறை.. ரூ.5 கோடியில் மிதவை உணவகக் கப்பல்: எங்கு தெரியுமா?

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகஇந்த படகு இல்லத்தில்ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது. இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

Also Read: "எந்த துறைக்கும் நிதிஒதுக்கீடு குறைக்கப்படவில்லை" -அதிமுக MLA-வின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பதிலடி!