Tamilnadu

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு திமுக அரசு செய்த சாதனைகள் என்ன?.. பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெறும் 50 பிரிட்ஜ் கருத்தரங்கினை (BRIDGE'23) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் அதாவது 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார்.

• அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை - எளிய மாணவர்கள் கணினி எனும் இயந்திரத்தை நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அவர்களுக்கு கணினிக் கல்வியைத் தந்தார்.

• 1999-2000-ஆம் ஆண்டே, பள்ளிப் பாடத் திட்டத்தில் மட்டுமின்றி, கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்விப் பாடத்திட்டங்களிலும் கணினி பாடத்தை அவர் கொண்டுவந்தார்.

• 1996-2001 ஆட்சிக் காலத்திலேயே ‘Empower IT’ என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டிகள் எல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு சென்றார்.

• அப்போதே Mobile Governance, E-Governance போன்றவை அரசு அலுவலகங்களில் - அரசு சேவைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

• தமிழ்நாட்டில் IT Professionals ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தார்.

• தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை அவர் மாற்றிக் காட்டினார்.

• தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனித் துறையையும் 1998-ஆம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்கு தனி அமைச்சரையும் நியமித்தார்.

• கணினி என்ற பெயரைப் பலரும் கேள்விப்படுவதற்கு முன்னதாகவே, டைடல் பார்க்கை தமிழ்நாட்டில் அமைத்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்தான் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். 1997-இல் தரமணியில் டைடல் பார்க்கை உருவாக்கிட அதற்கென புதுக் கொள்கையினை உருவாக்கி, ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக அதனைக் கட்டி, 2000-ஆம் ஆண்டில் அதனைத் திறந்து வைத்து, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தார்.

• தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு நிகழ்த்தியிருக்கும் இன்றைய சாதனை, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றிதான் என்று நாம் உறுதியோடு சொல்லமுடியும். மற்ற மாநிலங்களை விட தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னேறி இருக்கக் காரணம் தலைவர் கலைஞர் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

இதே வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசும் இப்போது செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான, அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்பையும், மனித ஆற்றலையும் தமிழ்நாடு முழுமையாகக் கொண்டுள்ளது. இதை நன்கு பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழுப் பயன்கள் சென்று சேர்ந்திடவும், இந்தியாவிலேயே, தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக உருவாக்கிடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது”.. இளைய தலைமுறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!