Tamilnadu

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கமிட்டவர் மீது தாக்குதல் - பழனிசாமி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

சிவகங்கை நகரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் மதுரை விமான நிலையம் சென்றார். அப்போது, விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வரும் பேருந்தில் ஏறி வருகை தந்தார்.

அதேபேருந்தில் சிங்கம்புணரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரது மகன் ராஜேஷ் என்பவர் பயணித்துள்ளார். முன்னதாக தனது முகநூல் பக்கத்தில், எடப்பாடி பழனிசாமி தம்முடன் பயணிப்பதாக கூறி முகநூலில் நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி துரோகத்தின் அடையாளம் எனக் கூறி, அவருடன் பயணம் செய்கிறேன் என பேசியுள்ளார்.

தொடர்ந்து எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம் என்று ராஜேஷ் முழக்கமிட்டுள்ளார். இதனைக் கவனித்த எடப்பாடி நடிகர் வடிவேலு பாணியில் கையை உயர்த்தி காண்பித்து சைகை செய்தார். மேலும் "10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் உடன்வந்தவர் அவரது செல்போனை பறித்தார்.

பின்னர் ராஜேஷை விமான நிலைய போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகி அவரை தரதரவென இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராஜேஷ் அளித்தப் புகாரின் பேரில் போலிஸார், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர் மற்றும் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “எடப்பாடி துரோகத்தின் அடையாளம்” : விமான நிலையத்தில் கூச்சலிட்ட இளைஞர்.. வழிமறித்து தாக்கிய அதிமுகவினர்!