Tamilnadu

சட்டவிரோதமாக போடப்பட்ட மின்வேலி.. மின்சாரம் தாக்கி 3 பெண் யானைகள் பலி: தாயை இழந்த சோகத்தில் குட்டி யானை!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளி கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவர் பெங்களூருவில் வசித்து வருவதால் தனது 22 ஏக்கர் நிலத்தை முருகேசன் என்பவருக்கு குத்தகைக்க விட்டுள்ளார். இதையடுத்து வனவிலங்குகளிடம் இருந்து நிலத்தைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமாக மின்சார வேலிகளை முருகேசன் அமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த விவசாய நிலத்தின் வழியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஐந்து யானைகள் வந்துள்ளது. அப்போது, மின்சாரம் பாய்ந்து மூன்று பெண் யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் உடன் வந்த குட்டி யானைகள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கியே சுற்றி வந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டவிரோதமா மின் வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் அங்குச் சுற்றிக்கொண்டிருந்த 2 குட்டி யானைகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். இதையடுத்து உயிரிழந்த மூன்று யானைகளுக்கும் 20 பேர் கொண்ட கால்நடை மருத்துவர்கள் குழுவினர் விவசாய நிலத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர். உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு யானைகளை அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: தாய்க்கு விஷம் கொடுத்து, தற்கொலை செய்துகொண்ட மகன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்.. பின்னணி என்ன ?