Tamilnadu

"தமிழ்நாட்டை பசுமை தமிழ்நாடாக மாற்றுவதே எங்கள் முதல் இலக்கு".. அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், "காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியாவில் 2070ல் தான் கார்பன் சமநிலை நாடு என்ற பெயரை எட்டும் என கூறப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதல் கார்பன் சமநிலை பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையைக் கருத்தில் கொண்டு மூன்று திட்டங்களை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 22%ல் இருந்து 33%ம் உயர்த்துவதற்காக 2 கோடியே 50 லட்சம் மரக்கன்று பதியம் போடப்பட்டு நடவு செய்கின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பசுமை தமிழகமாக மாற்றுவதே முதல் இலக்கு.

கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனைத் தடுக்க கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகக் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க ஆய்வு மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்த இரு கண்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டது என்ன?