Tamilnadu

வீட்டை காலி செய்வது போல் நடித்து கஞ்சா கடத்தல்.. கைதானவர் பாஜக நிர்வாகி என வெளியான தகவல்? - முழு விவரம் !

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே குற்றங்களுக்கு எதிராக பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வரப்படுகிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கஞ்சா ஒழிப்பு. கஞ்சா 2.O என்ற பெயரில் கைது வேட்டை செய்து வந்தனர். தற்போது கஞ்சா 3.O என்ற பெயரில் கைது வேட்டை செய்து வருகின்றனர் காவல்துறையினர்.

கஞ்சா வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிகாரிகள், இது தொடர்பாக பல்வேறு நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அதிமுக நிர்வாகி ஒருவர், கஞ்சாவை டோர் டெலிவரி செய்ததாக கைது செய்யப்பட்டார். அந்த வகையில் தற்போது 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர - 4 சக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு அதிகாரிகள் எப்போதும் சோதனையில் ஈடுபட்டிருப்பர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா கடத்தி வந்த சூர்யா, பிரவீன் என்ற 2 இளைஞர்களை மடக்கி விசாரித்தபோது அவர்கள் கஞ்சா கடத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்களை பத்திரிகையாளர் என்று கூறி போலியான அடையாள அட்டையை காண்பித்துள்ளனர்.

மேலும் தங்கள் தலைவன் திருவேற்காட்டை சேர்ந்த வினோத் குமார் என்றும், இவர் ஒரு புலனாய்வு பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்வதாகவும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வினோத் குமாரை தீவிரமாக தேடி வந்த போரூர் தனிப்படை அதிகாரிகள், அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர்கள் தேவராஜ், பாலாஜி உட்பட அனைவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆவடி துணை கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது, "வினோத் குமார் போலியான பத்திரிகை அடையாள அட்டையை உருவாக்கி, தன்னை சேர்ந்தவர்களுக்கும் அதனை உருவாக்கி கொடுத்துள்ளார். மேலும் அதனை வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ரயில் மூலம் கஞ்சா எடுத்து வருவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு மாற்றாக புதிதாக லோடு வேன் ஒன்றை வாங்கி அதில் வீட்டை காலி செய்து பொருட்களை எடுத்து செல்வது போல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் அந்த வாகனத்தில் வைத்து செட் செய்து ஆந்திராவிற்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் இவரிடம் ஏதேனும் விசாரித்தால், தான் ஒரு பத்திரிகையாளர் என்று தனது போலி அடையாள அட்டையை காண்பித்து தப்பித்து வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டில், அவரது வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள், இருசக்கர வாகனம், ஒரு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வினோத் குமாரின் வங்கி கணக்குகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உறவினர்கள் யாராவது இந்த சம்பவத்தில் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு அவரது நண்பர்கள் உறவினர்கள் வங்கி கணக்கும் சோதனை செய்யப்படவுள்ளது" என்று கூறினார்.

இதனிடையே இதில் கைது செய்யப்பட்ட வினோத் குமார் என்பவர் பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்று வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, வினோத் குமார் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என தமிழ்நாடு பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு விளக்கம் அளித்துள்ளார்.

எனினும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Freezerல் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. - டெல்லியை உலுக்கும் தொடரும் கொலைகள் !