Tamilnadu

“அண்ணாமலை, தேஜஸ்வி சேட்டையின் எதிரொலி..” : எல்.முருகனுக்கு Indigo விமானத்தில் நேர்ந்த அவலம் ?

தமிழ்நாடு பா.ஜ.கவில் இணைந்து உடனே தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு, தமிழ்நாட்டு பா.ஜ.கவையே மேலும் அதளாதளத்திற்குள் கொண்டுச் சென்றதே அண்ணாமலை சாதனை என சொந்தக் கட்சிகாரர்களே விமர்சிக்கும் வகையில் அவரது செயல்பாடு உள்ளது.

விவரம் தெரியாமல் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பா.ஜ.க தலைவர்களுக்கு மத்தியில், தான் சொல்வது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என தெரிந்தே உருட்டுவதில் அண்ணாமலை எப்போதுமே தனி ரகம் தான்.

அண்ணாமலை சொல்லும் பொய்யால் அம்பலப்பட்டு போவது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது என்ற விமர்சனமும் எழுந்தபோதும் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல், வாய்சவடால் மட்டுமே பேசியிருப்பது இந்த தனி ரகத்திற்குள் அடங்கும். அந்தவகையில், அண்ணாமலையின் இத்தகைய சேட்டை மற்றும் பொய்களால் பா.ஜ.க தலைவர்கள் பலரே பாதிக்கப்படுவது உண்மை என நிரூபிக்கும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.

கடந்த டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பா.ஜ.க இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாவும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானம் புறப்படும் நேரத்தில் 'எமர்ஜென்சி' கதவிற்கான பட்டனை அழுத்தி விளையாட்டு காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், பயணிகள் அச்சமடைந்ததோடு மட்டுமின்றி, விமானத்தில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மீண்டும் விமானத்தை சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து தற்போது விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி வந்தது.

அதன்பின்னர் பலரும் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டு இருவரையும் விமானங்களில் பயணிக்க முடியாத வகையில் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்தே பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அண்ணாமலையை நெட்டிசன்கள் வறுத்தெடுத்த சம்பவம் எல்லாம் அரங்கேறியது.

இதனிடையே தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் இன்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். அதோடு, ஜன்னல் ஓரத்தில் உள்ள எமர்ஜென்சி கதவு அருகே உட்கார்ந்து இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், “நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் அதை திறக்க மாட்டேன். அது பயணத்திற்கும், பயணிகளுக்கும் நல்லதல்ல" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பா.ஜ.க ஒன்றிய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகனின் விமான இருக்கை மாற்றப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தி ஒன்றில், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் கடந்த பிப்ரவரி 3ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, எல். முருகன் விமானத்தில் பயணிப்பதற்காக தனது இருக்கையில் உட்காந்திருத்ததாகவும், அவர் உட்காந்திருந்த இருக்கை எமர்ஜென்சி எக்ஸிட் அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இணை அமைச்சர் எல். முருகன் உட்காந்திருந்த எமர்ஜென்சி எக்ஸிட் அருகில் இருந்த இருக்கைக்கு பதில், அவருக்கு வேறு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் முதலில் இருந்த இருக்கைக்கு பதில், முன் வரிசையில் உள்ள இருக்கைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.கவின் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோரின் செயல்பாடுகளின் எதிரொலியாக இத்தகைய நடவடிக்கையை இண்டிகோ விமான அதிகாரிகள் எடுத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இணை அமைச்சர் எல்.முருகன் இருக்கை மாற்றப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்.. பகிரங்க மன்னிப்பு கோரிய பாஜக எம்.பி.. அண்ணாமலை நிலை என்ன ?