Tamilnadu

“கருத்து சுதந்திரத்தை பறிக்க உரிமை இல்லை..” : BBC ஆவணப்பட விவகாரத்தில் மோடியை கடுமையாக சாடிய கி.வீரமணி !

திருவாரூர் அருகே மஞ்சக்குடி பகுதியில் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் மறைந்த சிவானந்தம் இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, பான் மசாலா, குட்கா ஆகியவற்றுக்கு விதித்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து கேட்டபோது, இது ஒரு சட்ட பிரச்சனை. இந்த சட்ட பிரச்சனைக்கு உடனடியாக அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும். அதையும் தாண்டி வேறு விதமாக ஏதாவது நடந்தால் சட்ட திருத்தம் வரும். இந்த நாட்டில் ஏராளமான இளைஞர்கள் போதையால் கெடுகிறார்கள்.

சட்டத்தில் இருக்கும் சந்து பொந்துகளை பயன்படுத்திக் கொண்டு போதை வஸ்துகளை பரப்பலாம் என்று நினைப்பது ஒழுக்க கண்ணோட்டத்திலும் தவறு, சட்ட பிரச்சனையிலும் தவறு, சமூக ரீதியாகவும் தவறு. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அடைக்கப்படும். சமூக விரோதிகள் தடுக்கப்படுவார்கள்.

மேலும் பேசிய அவர், பிபிசி என்பது ஒரு சுதந்திரமான நிறுவனம். அது யாரைப் பற்றியும் கவலைப்படாது. இங்கிலாந்து நாட்டு பிரதமருக்கு அபராதம் விதிக்கும் வகையில் செயல்பட்டது பிபிசி. இங்கிலாந்து நாட்டை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு காப்பாற்றுவார்கள். அந்த நாட்டு அரசாங்கம் கூட பிபிசியில் தலையிட முடியாத அளவுக்கு சுதந்திரமா அமைப்பு பிபிசி.

அவருடைய கருத்தை சொல்கிறார்கள் அதை தடுப்பது தவறு என்று ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். கருத்து சுதந்திரத்தை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. உலகம் முழுவதிலும் இந்த செய்தி பரவி இருக்கிறது. உண்மையைக் கண்டு யாரும் உடம்பு எரிச்சல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “16 வருட போலிஸ் வாழ்க்கையில முதல்முறையா ஒரு திருடன பிடிச்சுருக்கேன்..” - ரியல் போலிஸ் ஜிபின் கோபிநாத் !