Tamilnadu

கடன் to ஆபாச வீடியோ.. கால்சென்டர் வைத்து மோசடி: ஆன்லைன் கடன் செயலி கும்பலை கைது செய்த போலிஸ்!

ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெறுபவர்களைக் குறிவைத்து ஆபாச மிரட்டல்கள் வருவதாக தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலும் பெண் ஒருவர் ஆன்லைன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

இதையடுத்து அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுத்துள்ளார். பிறகு அவருக்குக் கூடுதலாகக் கடன் தருவதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து அவர் ரூ.15 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

பின்னர் கடன் வாங்கியதற்கான தவணைக்காலம் முடிவதற்குள் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ஆபாசப் படங்களைச் சித்தரித்து உங்களது உறவினர்களுக்கு அனுப்பப்படும் என மிரட்டி செல்போன் கால் ஒன்று வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலிஸார் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பெண் மூன்று கடன் செயலிகள் மூலம் பணம் வாங்கியதும், இந்த செயலிகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இயங்குவதையும் போலிஸார் கண்டுபிடித்தனர். ஆனால் அவருக்கு மிரட்ட வந்த எண் காதர்பேட்டை பகுதியில் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அங்கு போலிஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கிருந்த கால்செட்ரில் இருந்துதான் அந்த பெண்ணுக்கு மிரட்டல் வந்தது தெரியவந்தது. பின்னர் அங்கர், முகமது ஷஃபி, முகமது சண், அனீஷ் மோ, அஸ்ரப் ஆகிய ஐந்து பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கும்பல் ரூ. 4 லட்சம் வரை கடன் செயலிகள் நிறுவனத்திடம் கமிஷன் பெற்றுக்கொண்டு கடன் வாங்கியவர்களை ஆபாசமாக மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்படி இவர்கள் தினந்தோறும் தமிழ்நாடு முழுவதும் 3500 பேர் வரை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் கால்சென்டரில் இருந்த 500 சிம்கார்டுகள், 30 டெபிட் - கிரெடிட் கார்டுகள், 11 சிம்கார்டு பாக்ஸ்கள், 6 மோடம், 3 மடிக்கணினிகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த கும்பலுக்கு பின்னால் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 'என்னையா வேலையை விட்டு தூக்கின'.. 6 மாதங்களுக்கு பின் manager-ஐ துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு!