Tamilnadu

“மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசாக வழங்குங்கள்..” : அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (30.12.2022) சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பெட்டகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கிருந்த சுய உதவிக் குழுவினரிடம் உரையாடி, அவர்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கி மகிழ்ந்தார்.

இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், பொம்மைகள், காபிப் பொடி, மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. 

மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. 

2022 டிசம்பர் 30ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 12ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இச்சிறப்புமிகு மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிக்கு அனைவரும் வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“முதல்வர்-நமது கழகத் தலைவர் அவர்கள், தன்னை சந்திக்க வருபவர்கள் புத்தகங்களை மட்டுமே அளிக்க வேண்டும், மலர்மாலை, பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, அதன்படியே செயல்பட்டு வருகிறார். அப்படி அவருக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள், பல்வேறு நூலகங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்களில் 1,350 புத்தகங்களைப் பள்ளிக்கல்வித் துறையின் பொது நூலகத்திற்கு அரசின் அறிவுப்பரிசாக இன்று துறை அமைச்சரிடம் முதலமைச்சர் வழங்கியதை, நாம் அறிவோம்.

இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர், நானும் அப்படி அறிவித்து, எனக்கு அளிக்கப்பட்ட புத்தகங்களை, பல்வேறு அரசுப் பள்ளி நூலகங்களுக்கு அளித்துள்ளோம். அரியலூர் சென்றபோது தங்கை அனிதா பெயரில் இயங்கிவரும் நினைவு நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கினோம். தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைக்கப்படவுள்ள, நடமாடும் நூலகத்துக்கு சுமார் 2,000 புத்தகங்களை அளித்துள்ளோம். எனக்கு வரும் பரிசு-உணவுப் பொருட்களைத் தொகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவருகிறோம்.

ஆனால், இந்த சால்வை அணிவிப்பதும் பூங்கொத்து கொடுப்பதும் தொடரத்தான் செய்கின்றன. ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்துக்கொள்வதற்கான தேவைகளை நாம் எட்டிவிட்டோம் என்றே நினைக்கிறேன்.

சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல, சில பழைய நடைமுறைகளைக் கைவிடலாம் என்பதே இதன் நோக்கம். நமது அன்பு பரிமாற்றத்தில் புத்தகங்கள் இடம்பெற்றதன் மூலம், நாம் அடுத்த கட்ட அறிவு இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம். அதேபோல இப்போது மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாகத் தொடங்கலாம் என நினைக்கிறேன்.

குறிப்பாக, தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டுக்கென அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளித்து, தொழிற்பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த இயக்கத்தில் நாமும் பங்குபெற முடியும்.

தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், மெழுகுவர்த்தி, அழகுக் கைவினைப் பொருட்கள், வெள்ளிக் கொலுசுகள், தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள், மரச் சிற்பங்கள் எனப் பலவற்றைத் தயாரித்து கண்காட்சிகளில் விற்பனைக்கு வைக்கின்றனர்.

அமைச்சரான பிறகு சமீபத்தில் நான் திண்டுக்கல், சிவகங்கை, கோவை, திருச்சி மாவட்டங்களின் நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது, அப்படியான தரமான, கலைநயமிக்க பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வியந்துபோனேன். அவற்றின் தரமும் மிகச் சிறப்பாக இருந்தது. அவற்றுக்கான விற்பனை வாய்ப்புகள் அதிகரிப்பதன் மூலம், அந்தப் பெண்களின் பொருளாதாரம் மேம்படும் என்பதை நாம் அறிவோம்.

ஆகவே, என்னைச் சந்திக்க வரும் கழகத்தினர் இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அன்புப் பரிசாக வழங்கலாம். இவற்றை ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். புத்தகங்கள், கழக வேட்டி-துண்டுகளை எப்போதும்போல் வழங்கலாம். ஆனால், பட்டு

சால்வை, பூங்கொத்து போன்றவற்றை அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவால் வழங்கும் நீங்களும் மகிழ்வீர்கள், உங்கள் மூலம் பலன் பெறுபவர்களும் மகிழ்வார்கள். இவற்றை எண்ணி நானும் மகிழ்ச்சி கொள்வேன். இந்த எளிய வேண்டுகோள் - ஏற்றமிகு மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன்..” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!