Tamilnadu

“பெயருக்கு ஏற்றார்போல் செயலும்..” - விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த இறையன்பு !

பொதுவாக மாநகரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். அதிலும் குறிப்பாக சென்னையில் காலை - மாலையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் தங்கள் பணிகளை முடித்து விட்டு விரைந்து வீட்டிற்கு செல்ல விரும்பும் ஊழியர்கள் உட்பட தங்கள் வாகனங்களை வேகமாக இயக்க முயல்வர், இருப்பினும் ட்ராபிக் காரணமாக அவர்கள் வேகமாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இருப்பினும் சில முக்கிய சாலைகளில் இளைஞர்கள் ஓவர் ஸ்பீட் எடுத்து வருவர். அப்படி வருவோருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. சிலர் இலேசான காயங்களுடன் தப்பித்தாலும் ஒரு சிலர் சம்பவ இடங்களிலே தங்கள் உயிரை இழக்கவும் நேரிடுகிறது.

அந்த வகையில் இன்று காலை சுமார் 9:15 மணியளவில் சென்னையிலுள்ள நேப்பியர் பிரிட்ஜ் அருகே இளைஞர் ஒருவர் தனது பைக்கில் வேகமாக வந்துள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோவும், அந்த பைக்கும் மோதியதில் பைக்கில் வந்த இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் காரில் தலைமைச் செயலகத்துக்கு சென்று கொண்டிருந்த தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, விபத்தில் சிக்கிய இளைஞரை பார்த்துள்ளார். அவரை பார்த்ததும் பதறிப்போன அவர், உடனே காரை நிறுத்த சொல்லி, கீழே இறங்கியுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறி அவர் பதற்றமடையாமல் இருக்கும்படி கூறினார்.

தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை கொடுத்து, அவர் யார்? என்ன?, பெயர், விலாசம் உள்ளிட்டவையை அறிந்துகொண்டார். அப்போது அவர் சென்னை வேளச்சேரியை சேர்ந்த குமரேசன் (வயது 34) என்பதும், ஒரு சிறிய வேலை காரணமாக பூக்கடை நோக்கி சென்றதும் தெரியவந்தது.

பின்னர் ஆம்புலன்ஸை வரவைத்து, அவரை உடனே ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவமனையில் இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய இளைஞரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமைச் செயலாளர் இறையன்புவின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாரட்டை பெற்று வருகிறது.

Also Read: அதிமுக vs திமுக ஆட்சி புயல்கள்: சேதமடைந்த மின்கம்பங்களின் எண்ணிக்கையை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!