Tamilnadu

மகாகவி பாரதியாரின் பேத்தி திடீர் மறைவு.. தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் ! - யார் இந்த லலிதா பாரதி ?

தமிழ்நாட்டில் என்றும் மறக்க முடியாத சுதந்திர போராளிதான் மகாகவி பாரதி. இவர் தனது கவிதை பாட்டுகளாலே சுதந்திர தீயை மக்கள் மனதில் விதைத்தார். இவருக்கு 1897-ம் ஆண்டு செல்லம்மா என்று இரண்டு மகள்கள் இருந்தனர். அதில் மூத்த மகள் பெயர் தங்கம்மாள் பாரதி, இளைய மகள் பெயர் சகுந்தலா பாரதி ஆகும்.

பாரதியார் இறந்தபிறகும் கூட அவரது நினைவுகள் மக்கள் மனதில் அழியாமல் இருக்கிறது. மேலும் அவரது மகள் வழி குடும்பம் இன்னும் உயிருடன்தான் உள்ளது. அண்மையில் கூட பாரதியாரின் 141-வது பிறந்த தினம் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் பாரதியின் மூத்தமகள் தங்கம்மாளின் மகளான லலிதா பாரதி (94) வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் காலமானார். பாரதியார் போலவே தமிழ் மொழி மீது பற்றுக்கொண்டு தமிழ் புலமை வாய்ந்த லலிதா, இசைத்துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.

எனவே முறையான இசையை கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கினார். தனது தாத்தா போலவே பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். எல்லாவற்றிக்கும் மேலாக பாரதியார் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் பரப்புவதிலும் முக்கிய பங்கு கொண்டிருந்தார்.

இவருக்கு ஒரு ராஜ்குமார் என்ற மகன் இருக்கும் நிலையில், அவரையும் இசைத்துறையில் சாதனை படைக்க வைத்துள்ளார். ராஜ்குமார் தற்போது பாரதி கர்நாடக இசைப் பாடகர் ஆவார். எஸ்.வைத்தியநாதன், இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் இசையில் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். 'பாரதி' படத்தில் வரும் "கேளடா மானிடா.." பாடலை ராஜ்குமார் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரின் திடீர் மறைவு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Also Read: அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம்.. அதிரடி காட்டிய போக்குவரத்துத் துறை !