Tamilnadu
முதல் நாள்.. மூன்று கையெழுத்து: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் கையெழுத்து எதற்குத் தெரியுமா?
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேடையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வாழ்த்து பெற்றார். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சித் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சராகப் பதவியேற்ற உடன் உதயநிதி ஸ்டாலின் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். பிறகு அங்கிருந்து தலைமைச் செயலகம் வந்தார். அங்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார்.
மேலும் அமைச்சரான முதல்நாளே, 2022 -2023ம் ஆண்டில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டிக்கான முதல் கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார். பின்னர், விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கும் மற்றொரு கோப்பில் கையெழுத்திட்டார். அதுமட்டுமல்லாது துப்பாக்கிச்சுடும் போட்டியில் பதக்கம் வென்ற நிவேதாவுக்கு ஊக்கத் தொகை வழங்கும் மூன்றாவது கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இதையடுத்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!