Tamilnadu

கோவிலில் கொள்ளை அடிக்க Plan போடும் போது சிக்கிய திருட்டு கும்பல்.. போலிஸிடம் பிடிபட்டது எப்படி?

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூர் சுள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (60). அங்கு குடும்பத்துடன் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார். மேலும் திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள ராயர்பாளையம் அருள்மிகு விநாயகர் கோவிலில் இருவேளையும் பூஜை செய்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இரவு பூஜை முடித்து நேரம் ஆனதால் அருகில் உள்ள கோவில் மண்டபத்தில் படுத்து உறங்கியுள்ளார். அதிகாலை 3 மணிக்கு தூக்கம் விழித்து எழுந்து பார்த்தபோது கோவில் அருகே பேச்சுகுரல் கேட்டுள்ளது.

அங்கு சென்று இருட்டில் மறைந்து பார்த்தபோது, கோவிலின் முன்பக்க விளக்கு வெளிச்சத்தில் ஏழு நபர்கள் கையில் அரிவாள், கத்தி ஆகியவற்றை வைத்துக்கொண்டு, தங்களுக்குள் இந்த கோவிலில் கொள்ளை அடித்துவிட்டு, பின்னர் கணபதிபாளையம் பகுதியில் ஏற்கனவே பார்த்து வைத்துள்ள வீட்டில் கொள்ளை அடித்து அனைவரும் பங்கு போட்டுக்கொள்ளலாம் என பேசியதை கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி தனது மகனுக்கு போன் செய்து சில ஆட்களுடன் கோவிலுக்கு வருமாறு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவரது மகன் சில நண்பர்களுடன் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களை அழைத்துக்கொண்டு வந்து அங்கு பேசி கொண்டிருந்த 7 நபர்களை மடக்கி பிடித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தேனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மோகன் குமார், வீரமணி, வினோத் குமார், விஜய், ரஞ்சித்,ரமேஷ் குமார், மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த பல்லடம் காவல் துறையினர் அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். கோவிலில் கொள்ளை அடிக்க முயன்ற நபர்களை பூசாரி தனது மகன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தைரியமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: 3 மாத Plan.. 3 நிமிடம் வேடிக்கை பார்த்ததால் மாட்டிய திருடர்கள்: சென்னை நகை கடை கொள்ளை சம்பவத்தில் திடுக்!