Tamilnadu

மாண்டஸ் புயல் : தமிழக அரசின் துரித நடவடிக்கை.. சமூக வலைதளங்களில் நான்கு பக்கமும் குவியும் பாராட்டுகள் !

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சுமார் அதிகாலை 3.15 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த நிலையில், காற்றின் வேகமும் படிப்படியாக குறையத்தொடங்கியது. சென்னையில் மழை அதிகளவில் பெய்தும் மாநகராட்சி ஊழியர்களின் செயல்பாடு காரணமாக தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்றும், சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்காமல் போக்குவரத்துக்கு சீராக உள்ளது என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் அரசின் துரித நடவடிக்கை குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனை செய்தி மக்கள் தொடர்புத் துறை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அரசின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இன்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உணவு பொட்டலங்களுடன், நிவாரண பொருட்களையும் வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுகளையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மாண்டஸ் புயல் : “மக்கள் அச்சத்தை விடுத்து நிம்மதி அடைந்துள்ளனர்..” - தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு !