Tamilnadu

'அப்போ எனக்கு பசிக்கும் ல'.. உண்ணாவிரத போராட்டத்தில் EPS பேசும்போது நைசாக கழன்று கொண்ட அதிமுக தொண்டர்கள்!

கோவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அதி.மு.க தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கிவைத்து எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார். அப்போது போராட்டத்திற்கு வந்திருந்த அ.தி.மு.க தொண்டர்கள் ஒருவர்பின் ஒருவராக நாற்காலியிலிருந்து எழுந்து அருகே இருந்த கடைகளுக்குச் சென்று உணவு சாப்பிட்டுள்ளனர்.

மேலும் சில தொண்டர்கள் டீ குடித்துக் கொண்டே எடப்பாடி பழனிசாமியின் உரையை ஜாலியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நடப்பது உண்ணாவிரதப் போராட்டம் என்று கூட தெரியாமல் ஒரு வேனிலிருந்து தொண்டர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டுள்ளது. உணவு வாங்குவதற்காகத் தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

சில அ.தி.மு.க தொண்டர்கள் அருகே இருந்த மதுக்கடைக்குச் சென்று மகிழ்ச்சியாகச் சரக்கு வாங்கி குடித்து விட்டு அமைதியாக வந்து நாற்காலியில் அமர்ந்துள்ளனர். இதையெல்லாம் பார்த்த அப்பகுதி மக்களுக்கு நடப்பது உண்ணாவிரதப் போராட்டம் தானா அல்லது ஏதாவது விருந்து நடக்கிறதா என்ற குழப்பமே ஏற்பட்டு விட்டது.

'சார் இது உண்ணாவிரதப் போராட்டம் தானே?', கொஞ்சம் உங்கள் தொண்டர்களுக்குச் சொல்லுங்கள் என பொதுமக்கள் முணுமுணுத்தபடியே நடந்து சென்றனர். தற்போது அ.தி.மு.க தொண்டர்கள் உணவு சாப்பிடுவதும், மதுக் கடைக்குச் செல்லும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் அ.தி.மு.கவை கிண்டல் அடித்து வருகின்றனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வரும்போது திடீரென தொண்டர்கள் மேடையில் ஏற முயன்றனர். அப்போது எடப்பாடிக்கு பாதுகாப்பாக வந்திருந்தவர்கள் தொண்டர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் தொண்டர்கள் கோவத்துடன் தகராறில் ஈடுபட்டனர். பிறகு வேலுமணி அங்கிருந்தவர்களை கத்தி கூப்பாடு போட்ட பிறகே போராட்டம் தொடங்கியுள்ளது. இப்படி உண்ணாவிரதப் போராட்டம் என்ற பேரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு கேலி கூத்து நேற்று கோவையில் நடந்துள்ளது.

Also Read: தன் மீதான வழக்கு விசாரணையை பார்த்து மிரண்டு கிடக்கும் வேலுமணி.. கைகட்டி நிற்க போகும் அதிமுக கும்பல்!