Tamilnadu
குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க டிராக் KD செயலி அறிமுகம்.. அசத்தும் தமிழ்நாடு காவல்துறை!
தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வளர்ந்துள்ள தொழில் நுட்பங்களுக்கு ஏற்பவும் போலிஸார் தங்களைத் தகவமைத்துக் கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்க நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகள் மீது மாதந்தோறும் ஆய்வு நடத்தி நேரடி கண்காணிப்பு செய்யும் விதமாக அவர்களின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் காவல்துறை மூலம் டிராக் KD என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியைச் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் தாமரைக் கண்ணன் மேற்பார்வையில், சென்னை காவல்துறை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான காவல் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த டிராக் KD செயலியை இன்று டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழகக் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"டிராக் KD செயலி மூலம் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை விபரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர், பிணைப் பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்தி வைக்க முடியும் எனவும், அதன் காரணமாகக் காவல் அதிகாரிகளால் குற்றவாளிகளின் பல்வேறு விபரங்களை விரல் நுணியில் வைத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலியில் 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திர பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகளை கண்காணிப்பதற்கும், பழிவாங்கும் வகையில் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்கும் இது உதவும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!