Tamilnadu

உ.பி பாணியில் மாட்டை வைத்து அரசியல் செய்த பாஜக மாவட்ட தலைவர் கைது.. அதிரடி காட்டிய தமிழ்நாடு காவல்துறை !

நெல்லை மாநகர பகுதிகளில் மாடுகள் அதிக அளவு சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர். குறிப்பாக மேலப்பாளையம் பகுதியில் அதிக இடங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதையடுத்து மாடுகளை சாலையில் திரியவிட்டால் அவற்றை பிடித்து ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மேலப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஏலம் விட்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று பாளையங்கோட்டை சமாதான புரத்தில் வைத்து சாலைகளில் திரிந்து மாடுகளை பிடித்து ஏலம் வீடு பணிகள் நடைபெற்றது அதே சமயம் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு மாட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.

ஏலம் நடைபெறும் இடத்திற்கு இந்த அமைப்புகள் கொடியுடன் வந்து வாக்குவாதம் செய்தனர் அப்போது தனது மாடு ஏலம் விடப்படுவதை கண்டித்து இளைஞர் சூர்யா என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயன்றதால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் மாடுகள் ஏலம் விடும் விவகாரத்தை நெல்லை மாவட்ட பாஜக கட்சி கையில் எடுத்தது. அதன்படி ஏலம் விடுவதற்காக பறிமுதல் செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகளை நேற்று இரவு மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் தலைமையில் அக்கட்சியினர் அத்துமீறி பூட்டை உடைத்து அவிழ்த்து விட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

அப்போது அங்கிருந்த அலுவலர்களை பாஜகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை சட்ட விரோதமாக கட்சியினர் தங்கள் இஷ்டத்துக்கு அவிழ்த்து விடப்பட்டதால் மாநகராட்சி சார்பில் பாஜக மாவட்ட தலைவர் தயாசாங்கர் உட்பட பாஜகவினர் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாடுகளை அவிழ்த்து விட்ட புகாரில் பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் உட்பட 30 பேர் மீது நெல்லை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், தயாசங்கரை மாநகர காவல்( கிழக்கு) துணை ஆணையர் சீனிவாசன் தாழையூத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அதிரடியாக கைது செய்தார்.

அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் ( 147, 452, 353, 427, 506 )வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மீது நடவடிக்கை எடுப்பது அனைத்து மாநகராட்சிகளிலும் கடைபிடிக்கப்படும் வழக்கமான முறையாகவும் அப்படி இருக்கும்போது நெல்லையில் பாஜக கட்சியினர் மாடுகள் ஏலம் விடும் விவகாரத்தை அரசியலாக்கும் வகையில் போராட்டம் நடத்தியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிவேகத்தில் வந்த கார்.. சாலை விபத்தில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம் !