Tamilnadu
வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சமூகநீதி, கல்வியை தமிழர்களுக்கு கொடுத்த நீதிக்கட்சியின் பிறந்தநாள் இன்று!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறைகளை ஒரு நூற்றாண்டு காலத்தில் புரட்டிப் போட்டு, சமூக நீதியை நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று.
இடஒதுக்கீடு, அதன் வாயிலாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிமை, ஒடுக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் காக்கும் உயர்வான சட்டங்கள், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் கட்டாயம் என்ற தடையை அகற்றி எல்லோருக்கும் டாக்டர் ஆவதற்கான வாய்ப்பளிப்பு என அனைத்தையும் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் செயல்படுத்தியது நீதிக்கட்சி அரசு.
ஆங்கிலேயர் ஆட்சியில் மிகக்குறைந்த அதிகாரங்கள் மட்டுமே கொண்ட இரட்டை ஆட்சி முறையில், சமூக சீர்திருத்தத்திற்கான இத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது நீதிக்கட்சி எனும் திராவிட அரசியல் இயக்கம். அதன் தொடர்சியாகத்தான் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர் சமூக நீதிக் கொள்கையால் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
இந்தியாவில் வேறெங்கும் ஏற்படாத சமுதாய மறுமலர்ச்சி தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தினால் ஏற்பட்டது. இத்தகு பெருமைகள் வாய்ந்த நீதிக்கட்சியின் 106வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, நீதிக்கட்சியின் வழிவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், நீதிக்கட்சியை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்!
சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்!
தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்!
ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா.. விழி! எழு! நட!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!