உணர்வோசை

“‘நீதிக்கட்சியின் நீட்சி’ என்றதும் துக்ளக் துடிப்பது ஏன்?” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

துக்ளக் அறிவிலிகளாக இருந்தாலும் வலதுசாரி வண்கணாளர்களாக இருந்தாலும் தி.மு.கவின் மீது வன்மம் தீர்க்க எத்தகையை பொய்யையும் சொல்லி தங்களது பிறவிப்புகைச்சலைக் காட்டிக்கொள்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

“‘நீதிக்கட்சியின் நீட்சி’ என்றதும் துக்ளக் துடிப்பது ஏன்?” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

“நீதிக்கட்சியின் நீட்சியே இந்த ஆட்சி” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தலைநிமிர்ந்து முழங்கினார்கள். இதைக் கேட்டதும் சிலருக்கு அண்ட சராசரமும் அலறித் துடிக்கும் வகையில் அரிக்கிறது.

“நீதிக்கட்சியின் தொடர்ச்சியே நாம்” என்று சொன்னார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். சென்னை மாநகராட்சியை கழகம் கைப்பற்றியபோது, “உள்ளே செல்பவர்கள் வாசலில் இருக்கும் தியாகராயர் சிலையை நிமிர்ந்து பார்த்து விட்டுச் செல்லுங்கள்” என்று கட்டளையிட்டார் பேரறிஞர். “நீதிக்கட்சி என்பது இன்று ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாட்டன்முறை. திராவிடர் கழகம் என்பது தந்தை முறை” என்று சொன்னவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். இவர்தான் அண்ணாவுக்கு முன்னதாக நீதிக் கட்சியின் செயலாளராக இருந்தவர். பெரியாரையே நீதிக்கட்சி சார்பானவராக மாற்றியவர். அத்தகைய முத்தமிழ்க் காவலரே இப்படித்தான் சொல்லி இருக்கிறார். இதை வைத்துத்தான், ‘நீதிக்கட்சியின் நீட்சியே இந்த ஆட்சி' என்று சொன்னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீதிக்கட்சித் தலைவராக 1938ஆம் ஆண்டு தந்தை பெரியார் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் அதுவரை நடத்தி வந்த சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைந்தே 1944ஆம் ஆண்டு திராவிடர் கழகம் உருவாக்கப்படுகிறது. சமூகச் சீர்திருத்தத்துக்கு அரசியல் வடிவம் கொடுப்பதற்காக பேரறிஞர் அண்ணாவும் அவரது தம்பிமார்களும் சேர்ந்து 1949 இல் உருவாக்கிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இந்தத் தொடர்ச்சியைத்தான் முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த இயக்கத்துக்கு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறை முதலமைச்சர் சொல்கிறார். இந்த வரலாறு, தி.மு.க.வுக்குப் பெருமை தரும் வரலாறாக இருக்கிறது. ஏனென்றால், இன்றைக்கு நாம் பேசும் உயரிய தத்துவம் அனைத்தையும் தொடங்கி வைத்தது நீதிக்கட்சியே!

- சமூகநீதி எனப்படும் வகுப்புவாரி உரிமைக்காக இன்றும் நாம் போராடி வருகிறோம். இந்த வகுப்புரிமைத் தீர்மானத்தை 1921 செப்டம்பர் 16 ஆம் நாள் நிறைவேற்றிய ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி. சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியில், வேலைவாய்ப்பில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்க்கான வாசலைத் திறந்து வைத்த ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.

- பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி. சொத்துரிமை வழங்கியது தி.மு.க. ஆட்சி!

- திருக்கோவில் சொத்துகளைக் காக்க இந்து அறநிலைய நிர்வாக மசோதாவைக் கொண்டு வந்த ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி. இன்றும் கோவில் சொத்துகளைக் காத்து வரும் ஆட்சி தி.மு.க ஆட்சி!

- அனைவருக்கும் கல்வி நிலையங்களைத் திறந்துவிட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி! இன்று உயர்கல்வியை அனைவருக்குமானதாக ஆக்கிய ஆட்சி தி.மு.க ஆட்சி!

- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கிய ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி. மாநிலம் முழுவதும் ஏராளமான பல்கலைக்கழகங்களை உருவாக்கிய ஆட்சி தி.மு.க ஆட்சி!

- தொழில் வளர்ச்சி ஆலோசனைக் குழுவை முதன்முதலாக அமைத்த ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி. தொழில் வளத்தைப் பெருக்கிய ஆட்சி தி.மு.க ஆட்சி! - இப்படி நீதிக்கட்சியின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நடேசனார், தியாகராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர், பி.டி.ராஜன் ஆகியோரின் தொடர்ச்சிதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத்தான் சொன்னார். இதில் என்ன குறை கண்டுபிடித்தீர்கள்? ஒடுக்கப்பட்டவர் உயர்வுக்கு, அடக்கப்பட்டவர் வாழ்வுக்கு நீதிக்கட்சி உதவியதைப் போல தி.மு.க.வும் உதவுகிறதே என்ற வயிற்றெரிச்சல் சிலரைப் புலம்ப வைத்துள்ளது.

‘முரசொலி' மீதான அவதூறைப் பாய்ச்சிய அரைகுறை ஒன்று இணையதளத்தில், ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையை நீதிக் கட்சி ஆதரித்தது. அதனுடைய வாரிசு மு.க.ஸ்டாலினா?' என்று குரைத்துள்ளது. திராவிட இயக்கத்தை வசைபாடுவதையே பிறப்பழுக்காகக்கொண்ட ‘துக்ளக்' இதழில், ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்த நீதிக்கட்சி - தி.மு.க.வின் வழியும் இதுதானோ?” என்று கட்டுரை தீட்டப்பட்டுள்ளது. இப்படி கட்டுரை தீட்டுவதற்கு முன்னால் அதற்கான ஆதாரம் என்ன என்று தரவேண்டாமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவரான பி.ராமமூர்த்தி அவர்களின் புத்தகத்தை மேற்கோள் காட்டுகிறது ‘துக்ளக்'. அந்தப் புத்தகம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் 1984 ஆம் ஆண்டே மறுத்து எழுதப்பட்டுவிட்டது. ‘நான் பெரும்பாலும் என் நினைவில் இருந்தே எழுதினேன்' என்று பி.ராமமூர்த்தியே அப்போது சொல்லிவிட்டார். இதை வைத்து ‘துக்ளக்' தி.மு.க மீதான தனது இனப்பகையைத் தீர்க்கப் பார்க்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 ஏப்ரல் 13-ல் நடந்த வரலாற்றின் மாபெரும் கொடூரம். அந்தக் கொடூரத்தை நீதிக்கட்சி கண்டித்தது.

“நான்காவது பார்ப்பனரல்லாதார் மாநாடு” சென்னையில் நடந்தது. அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் செய்த அட்டூழியங்களைக் கண்டிப்பதில் நீதிக்கட்சிக் தலைவர்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. நான்காவது பிராமணர் அல்லாதோர் மாநாட்டில் பஞ்சாப் நிகழ்வு மற்றும் கிலாபத் இயக்கம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் ஆங்கிலேய அரசு மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அராஜக நடவடிக்கைகளைக் கண்டித்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

குறிப்பாக, பிரபுக்கள் சபை பஞ்சாப்பில் நடந்த கொடூரச் செயலில் மனிதத் தன்மையற்று நடந்து கொண்டது பற்றியும், பஞ்சாப் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும் பஞ்சாப் கொடூரச் சம்பவத்துக்குக் காரணமான அனைவரையும், பதவி பாகுபாடின்றி அரசு தண்டிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

இந்த விஷயத்தில் அரசு பொறுப்புடன் செயல்பட்டு குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது குறித்து என்.ஏ.வி.சோமசுந்தரம் பிள்ளை பொதுமக்களிடம் பேசும்போது, 'ஹண்டர் கமிட்டியின் அறிக்கை பிரிட்டிஷ் நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.

இந்த அறிக்கையில் அதிகக் குற்றம் இழைத்தவருக்கு மிகச் சாதாரண தண்டனைகளும், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டதும் நியாயமற்றது' என்றார். கிருஷ்ண நாயர் கூறும்போது, 'இங்கிலாந்து வரலாற்றில் பஞ்சாப் நிகழ்வு ஒரு கரும்புள்ளி. மேலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜெனரல் டயரை மேம்போக்காக விசாரித்த விதம் கண்டனத்துக்குரியது.

மேலும் ஜெனரல் டயர் மனிதத்தன்மையற்று சுடச் சொன்னதும், காயமடைந்தவர்களைக் கொடுமைப்படுத்தியதும் அதற்காக அவருக்கு சிறிய அளவிலான தண்டனை அளிக்கப்பட்டதும் பிரிட்டிஷ் நீதித் துறையையும், அறத்தையும் அசைத்துப் பார்த்துள்ளது' என்று பேசினார் ” என்பதை ஆதாரமாக வைத்து எழுதுகிறார். இது எதையும் அறியாமல் உளறி வருகிறார்கள் சிலர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அடித்தளம் அமைத்த ரவுலட் சட்டத்தை எழுதிய நான்கு பேரில் ஒருவர் சி.வி.குமாரசாமி சாஸ்திரி என்பதும், இந்தப் படுகொலைக்குக் காரணமான வைஸ்ராயைத் திரும்பப்பெற வேண்டும் என்று அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதனைக் கண்டித்து வெளியேறியவர்கள் சர்.சி.பி.இராமசாமி அய்யரும், சீனிவாச சாஸ்திரியும்தான் என்பதையும் இவர்கள் அறிவார்களா?

(மயிலாப்பூர் வக்கீல்களின் இந்த வரலாற்றை ம.பொ.சி எழுதியிருக்கிறார்!) ‘துக்ளக்' அறிவிலிகளாக இருந்தாலும் வலதுசாரி வண்கணாளர்களாக இருந்தாலும் தி.மு.க.வின் மீது வன்மம் தீர்க்க எத்தகையை பொய்யையும் வாய்க்கு வந்தபடி சொல்லி தங்களது பிறவிப் புகைச்சலைக் காட்டிக்கொள்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

திராவிடன், தமிழன், நீதிக்கட்சி, சமூகநீதி, ஒன்றியம் என்ற சொற்களுக்கு நடைமுறையில் இருப்பதைவிட பல்லாயிரம் அர்த்தங்கள் இருக்கிறது என்பதை நம்மை விட அவர்கள் அறிவார்கள். அதனால்தான் அந்தச் சொற்களை திரும்பத் திரும்ப உச்சரிக்க வேண்டி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதைப் போல, 'சொல்லிக் கொண்டே இருப்போம்'. ஆமாம்! நாங்கள் நீதிக் கட்சியின் நீட்சிதான்!

Related Stories

Related Stories