Tamilnadu

வீட்டிற்கு செல்லும்போது பழுதடைந்த கிணற்றில் விழுந்த பெண்.. ஒரு மணி நேரத்தில் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

சென்னை அடுத்து மீஞ்சூர் நெய்தவாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பெரம்பூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாகக் கடந்த இரண்டு மாத பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு இரவு 9 மணி அளவில் வீட்டிற்குச் செல்ல மூலக்கடை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக அருகில் இருட்டான மறைவிடத்திற்குச் சென்றபோது அங்குப் பாழடைந்த உரை கிணற்றில் தவறி விழுந்து கூச்சலிட்டுள்ளார்

இவரின் சத்தத்தைக் கேட்ட அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக மாதவரம் காவல் நிலையம் மற்றும் மாதவரம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி கயிறு மூலம் விஜயலட்சுமியை மீட்டுக் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, கிணற்றில் விழுந்ததால் விஜயலட்சுமிக்கு இடது கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறி கிணற்றில் விழுந்த பெண்ணை ஒரு மணி நேரத்திலேயே மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Also Read: instagram-ல் unfriend செய்ததால் ஆத்திரம்.. நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டிய குறும்பட இயக்குநர் கைது!