Tamilnadu

சாலையில் சுற்றித்திரிந்த குழந்தை.. காரை நிறுத்தி குழந்தையை போலிஸில் ஒப்படைத்தவருக்கு கமிஷனர் பாராட்டு !

அடுக்குமாடி குடியிருப்பில் தவறிய குழந்தையை மீட்டு காவல்துரையிடம் ஒப்படைத்த மருத்துவரை ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை போரூர் ஐயப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். வேலூர் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த 3-ம் தேதி இரவு நேரத்தில் பணி முடிந்து தனது காரில் போரூருக்கு குமணன்சாவடி வழியாக பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலை ஓரத்தில் சுமார் 2 வயது சிறுவன் ஒருவன், அழுதபடி தனியாக நின்றுகொண்டிருந்தார். இதனை கண்ட மருத்துவர் உடனடியாக காரை நிறுத்தி சிறுவன் அருகே சென்று யார் என்ன என்று விசாரித்தார். அப்போது சிறுவனுக்கோ அவனது விலாசம் குறித்து தெரிவிக்க முடியவில்லை. ஆனால் தனது பெயர் உமர் என்பதை மட்டும் தெரிவித்தார்.

இதையடுத்து அது இரவு நேரம் என்பதாலும் சிறுவனுடன் யாரும் இல்லை என்பதாலும் சந்தேகமடைந்து சிறுவனை மீட்டு பூந்தமல்லி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த சிறுவன் குறித்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் அந்த குடியிருப்பில் வசித்து வரும் அர்திக் பாஷாவின் மகன் என்பதும், சம்பவத்தன்று கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு லிப்டில் வீட்டிற்கு சென்றபோது லிப்ட்டில் இருந்து கீழே இறங்கிய சிறுவன், காவலாளிகளையும் மீறி அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே சென்றதும் தெரியவந்தது.

பின்னர் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தங்கள் குழந்தையை பெற்றுக்கொண்டனர். மேலும் சிறுவனின் பெற்றோருக்கு காவல்துறையினர் அறிவுரையும் வழங்கினர். குழந்தையை பத்திரமாக மீட்டு வந்த மருத்துவருக்கு காவல்துறை சார்பில் பாராட்டுக்களும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குழந்தையை பத்திரமாக மீட்டுக்கொடுத்த மருத்துவர் நந்தகுமார் மற்றும் பூந்தமல்லி காவல்துறையினரை நேரில் அழைத்து ஆவடி காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களும் வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரையும் நேரில் அழைத்து ஆணையர் அறிவுரையும் கூறினார். இதனிடையே சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறுவது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒரே பிரசவத்தில் பெற்ற 3 குழந்தைகளை கைவிட்ட பெற்றோர் : உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் !