Tamilnadu

மகளிர் கல்லூரிக்குள் புகுந்து ரகளை.. 10 இளைஞர்களை கைது செய்து அதிரடி காட்டிய மதுரை போலிஸ் !

மகளிர் கல்லூரிக்குள் புகுந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட 10 இளைஞர்களை மதுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை அடுத்து தல்லாகுளம் பகுதியில் லேடி டோக் (Lady Doak) மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளம்பெண்கள் பலர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த 30-ம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் லேடி டோக் மகளிர் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது அவர்கள் கல்லூரி மாணவிகள் சிலரிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் பெண்களிடம் தகாத முறையிலும் நடந்து கொண்டனர். இதனிடையே இந்த இளைஞர்களை அந்த கல்லூரியின் பாதுகாவலர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அந்த கல்லூரியின் கண்காணிப்பாளர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரளித்த புகாரின்பேரில் அந்த இளைஞர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிய பட்டது. மேலும் அவர்கள் யார் என்ற விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 10 இளைஞர்களையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் மோகன் ராஜ் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த 10 இளைஞர்கள் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டனர்.

மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் மோகன் ராஜ்

அதோடு அந்த கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலரையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து இது குறித்து கல்லூரி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Also Read: "இந்திய அணியின் அடுத்த ஜாம்பவான் இவர்தான்" - இளம்வீரரை கைகாட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்!