Tamilnadu

வட கிழக்கு பருவமழை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட 5 முக்கிய உத்தரவுகள் என்ன ?

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் நேற்று இரவு 7 மணியிலிருந்து விடாமல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது.

இதையடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் வெள்ளம் தேங்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை முழுவதும் கடந்த 4 மாதங்களாக வடிநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த காலங்களில் போன்று மழைநீர் தேங்கவில்லை. இதனால் பொதுமக்கள் தி.மு.க அரசின் நடவடிக்கைகளுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வட கிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆசோணை நடத்தினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது.

சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் பெரும் சவாலாக இருந்தது. தற்போது மழை நீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமை.

பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் மக்கள் வெளியேற்றும் போது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும். வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்குத் தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும். தடையில்லாமல் பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முன்னதாகவே அளிக்கப்பட வேண்டும். மாநகர, நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் அது தொடர்புடைய பணிகளைக் கண்காணிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: 12 மணிநேர கனமழைக்குப் பிறகும் தண்ணீர் தேங்கல : இதுதான் ‘சிங்கார சென்னை’.. திமுக அரசை பாராட்டும் மக்கள்!