Tamilnadu

கோவை சம்பவம் : “கைது செய்யப்பட்டவர்கள் மீது UAPA சட்டத்தில் வழக்குப்பதிவு” - கோவை காவல் ஆணையர் விளக்கம்!

கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு மாருதி 800 வாகனம் 2 எல்.பி.ஜி சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களோடு கோவிலின் அருகே 4 மணி அளவில் வெடித்தது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த முபின் என்பவர் தீக்காயங்களோடு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உக்கடம் எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் புலன் விசாரணை செய்து வந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்தை போலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தடயங்களை பாதுகாத்து தடயவியல் குழு, மோப்பநாய் குழு மற்றும் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் உயிரிழந்தவர் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர் யார்? என்பதும் வாகனம் இதுவரை 10 பேர் கைமாறியதும் தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அன்று மாலையே வாகனம் எங்கிருந்து வந்தது இறந்தவர் யார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டது. பின்பு நீதிமன்றத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உயிரிழந்தவரின் வீடு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உதவி ஆணையருக்கு உதவியாக, 6 இன்ஸ்பெக்டர் தலைமையில் குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். துணை ஆணையர் நேரடியாக ஆய்வு செய்தார். நானும் நேரடியாக ஆய்வு செய்து வந்தேன். ஏ.டி.ஜி.பி மற்றும் டி.ஜி.பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், விசாரணையை தொடர்ந்து நேற்று 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதற்கு பிறகு FIR பதியப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) பதியப்பட்டுள்ளது. முதலில் 174 மற்றும் Section 3 வெடிபொருட்களை வைத்திருப்பது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தற்போது கைது செய்யப்பட்ட ஐவர் மீதும் கூட்டு சதி அடிப்படையில் 120b, 153a வெளிபொருட்கள் பயன்படுத்தியதால் UAPA சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்களை தற்போது வரை விசாரணை செய்தியுள்ளோம்.

சந்தேகத்திற்குரிய நபர்களது வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெடி விபத்து ஏற்பட்ட அன்றைய தினம் 200 மீட்டர் தொலைவில் போலிஸ் தடுப்பு இருந்துள்ளது. அங்கு அதிகாரிகள் இருந்துள்ளனர்.

காலை 3.30 மணி அளவில் அவர்கள் கோவில் அருகே ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டது. காவல் தடுப்பு இருந்ததால் அந்த இடத்தை தாண்ட முடியாமல் வெடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால், பெருமளவு சட்ட ஒழுங்கு பிரச்சனை தவிர்க்கப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியில் வாகன தணிக்கை மற்றும் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தீபாவளி நேரம் என்பதால் ஒப்பணக்கார தெரு மற்றும் அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்ற போதும் பெருமளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த கூட்டு சதியில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர். அவர்களது தொடர்பு எண் என அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் கேரளாவிற்கு சமீபத்தில் சென்று வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள் என விசாரித்து வருகிறோம்.

2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை முபின் வீட்டில் விசாரணை செய்துள்ளது. அவர்களிடமும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து அவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

உயிரிழந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வீட்டிலிருந்து மூட்டை எடுத்து வரும் சிசிடிவி காட்சி வெளியானது. அதில், இரண்டு சிலிண்டர்கள் மூன்று சிறிய ட்ரம் கேன்கள் அவர்கள் எடுத்து வந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. அதில் என்ன இருந்தது என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வீட்டிலிருந்து எடுத்து வரும் சிசிடிவி காட்சிகளில் ரியாஸ் நவாஸ், பெரோஸ் ஆகியோர் உள்ளனர். பொட்டாசியம் நைட்ரேட் உட்பட 75 கிலோ அளவிலான வெடி பொருட்கள் முபின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினை அடுத்து கோவை மாநகர பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தல்கா, அலுமா அமைப்பைச் சேர்ந்த பாஷா என்பவரது உறவினர் என தெரியவந்துள்ளது.

கோவை மாநகர பகுதியில் ஏற்கனவே 11 செக் போஸ்டர்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது, செக்போஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தேவையான இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

Also Read: “கோவை சம்பவம் - ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி!