Tamilnadu

“மாணவி சத்தியாவிற்கு நடந்த கொடுமை இனி ஒருபோதும் எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது” : முதல்வர் உருக்கம்!

சென்னையில் மாணவி சத்தியாவிற்கு நடந்த கொடுமை இனி ஒருபோதும் தமிழ்நாட்டில் எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னையில் சத்யா என்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, அதைப் படித்த, அறிந்த அத்தனை பேர்களுமே, நீங்கள் எல்லாம் துக்கத்தில் இருந்திருப்பீர்கள், துயரத்தை அடைந்திருப்பீர்கள். இது போன்ற சம்பவங்கள், இனி தமிழகத்தில் நிகழக்கூடாது, இதுவல்ல நாம் காண விரும்பக்கூடிய சமூகம்.

இனி எந்தப் பெண்ணுக்கும் இதுபோல, நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அறிவாற்றலிலும், தனித்திறமையிலும், சமூக நோக்க மனப்பான்மையும் கொண்டவர்களாக அவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.

பாடப் புத்தகக் கல்வி மட்டுமல்ல, சமூகக்கல்வி அவசியமானது. தன்னைப்போலவே, பிற உயிரையும், மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். நல்லொழுக்கமும், பண்பும் கொண்டவர்களாக, அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து இந்த சமூகத்துக்கான தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும். அவர்கள் எந்தவகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது.

இயற்கையில், ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம். அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. பெண்களை பாதுக்காக்கக்கூடியதாக அந்த வலிமை இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்னமாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

பள்ளி, கல்லூரிகளும், பெற்றோர்களும் சேர்ந்து இளைய சக்திகளை பாதுகாக்க அவர்களை எல்லாம் வளர்க்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அப்படி பாதுகாக்கப்படும் இளைஞர் சக்திக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது என்ற சக்கரச் சுழற்சியுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. வேலையின்மையும் இருக்கக் கூடாது. வேலை இழப்பும் இருக்கக் கூடாது என்று நான் உத்தவிட்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகை இல்லை” : பாஜக ஆளும் மாநிலத்தில் புதிய சட்டத்தால் அதிர்ச்சி !