Tamilnadu

கள்ளக்குறிச்சி: 108 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம்.. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் நெகிழ்ச்சி

பொதுவாக பிள்ளைகளுக்கு திருமணம் செய்து அழகு பார்ப்பது பெற்றோர் கடமை என்றால், பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்ப்பது பிள்ளைகளின் ஆசையாக இருக்கிறது. அதற்காக தந்தையின் 60-வது, 80-வது வயதில் 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', 'சஷ்டியப்த பூர்த்தி' உள்ளிட்ட விழாக்கள் பிள்ளைகள் கொண்டாடுகிறார்கள்.

இதில் தந்தைக்கும் தாய்க்கும் மீண்டும் திருமணம் நடைபெறுவது போல் இருக்கும். அவர்கள் தங்கள் பிள்ளைகள், பேரன் பேத்தி பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமும் வழங்குவர். இதுபோன்று விழா தந்தையின் 60-வது வயது முடிந்து 61-வது வயது தொடங்கும்போது நடைபெறுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளியில் 108 பேருக்கு மணிவிழா கொண்டாடிய நிகழ்ச்சி தற்போது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் இயங்கும் பள்ளி ஒன்றில் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுதோறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 1977 - 78-ம் ஆண்டு பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 150 பேர் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த முன்னாள் மாணவர்கள் 150 பேரில் 108 பேருக்கு தற்போது 60 வயது முடிந்துள்ளது. இதனைகொண்டாட நேற்று அந்த 108 பேருக்கும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அனைவரும் கணவன் மற்றும் மனைவிகளுடன் இணைந்து தம்பதியராக கூடினர்.

அங்கு அனைவருக்கும் ஒரே மேடையில் 60-ம் திருமணம் நடைபெற்றது. மேலும் 60 வயது துவங்காத, 6 தம்பதிகளுக்கும் சஷ்டியப்த பூர்த்தி யாகம் நடத்தி அனைவருக்கும் மஞ்சள் கயிறு, தாலி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அப்போது இவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் பங்கேற்று இவர்களுக்கு ஆசி வழங்கினர். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 150 பேரில் 108 பேருக்கு ஒரே நேரத்தில் 60-வது கல்யாணம் செய்துவைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: பேருந்தின் முன் தள்ளிக்கொல்லப்பட்ட பீகார் இளைஞர்.. உறவினர்களின் வெறிச்செயலின் பின்னணி என்ன ?