Tamilnadu

காஞ்சி: சிலிண்டர் விபத்தில் காயமடைந்த விலங்குகள்- விரைந்து காப்பாற்றிய தமிழக அரசின் கால்நடை மருத்துவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் கேஸ் ஏஜென்சி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடோனில் இருந்த சிலிண்டர் ஒன்று நேற்றைய முன்தினம் இரவு எதிர்பாராதபோது வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது தீயை அணைக்க முயற்சித்த போது, அதற்குள்ளயே தீ பரவி மற்ற சிலிண்டர்களை வெடித்து சிதறியது. தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கடை ஊழியர்கள் உட்பட சுமார் 12 பேர் சிக்கி படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து அனுமதிக்கப்ட்டவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் அருகாமையில் ஒரு வீட்டில் இருந்த நாய் மற்றும் 2 பூனைகள் சிக்கி உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. இதனை முதலில் அப்பகுதிவாசிகள் யாரும் கவனிக்கவில்லை. பின்னர் இன்று காலை வலி தாங்க முடியாத பூனை தொடர்ந்து கத்திகொண்டே இருந்ததால் பார்த்த நபர் ஒருவர் மற்றவர்களுக்கு தெரிவிக்க, உடனே அவர்கள் அதற்கு உதவி செய்ய எண்ணினர்.

அதன்படி தமிழ்நாடு அரசின் 1962 கால்நடை அவசர எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் விலங்குகள் நிலை குறித்து ப்ளூ கிராஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் விலங்குகளின் நிலை குறித்து ஆராய்ந்தனர்.

பின்னர் அதற்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அதனை பத்திரமாக ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "முன்னாள் கணவருக்கு டீ கொடுத்து உபசரிக்க வேண்டும்.." - தீர்ப்பை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் !