Tamilnadu

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் நீலகிரி.. எங்கெல்லாம் போகலாம், என்னவெல்லாம் பார்க்கலாம்?

ஆண்டுக்கு 33 முதல் 36 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நீலகிரி குறித்த சிறப்புச் செய்தி.

விண்ணை முட்டும் அளவிற்கு அழகிய மலைகள், கண்ணுக்கெட்டும் தூரம் வரை அடர்ந்த வனங்கள், காணும் இடமெல்லாம் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள், பச்சைப் பசேலென காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்கள், சாரல் மழை அவ்வபோது மேகமூட்டம் என குளுகுளு கால நிலையைக் கொண்ட சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா மாவட்டமாகும்.

இங்கிலாந்தில் நிலவும் காலநிலையும் உதகையில் நிலவும் காலநிலையும் ஏறத்தாள ஒரே மாதிரி காலநிலையை கொண்டது. இதனால் இங்கிலாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு உதகைக்கு வந்து செல்வது வழக்கம். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மக்கள் சுற்றுலா செல்வதில் அதிக விருப்பம் காட்டி வருகின்றனர்.

தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 33 முதல் 36 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளை நம்பி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள், குதிரை சவாரி மேற்கொள்வோர் என 45 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உதகை தோன்றி 200 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை கொண்டாடுவதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், உதகையை உருவாக்கிய ஜான்சல்லிவன் என்ற ஆங்கிலேயருக்கு அரசு தாவரவியல் பூங்கா அருகே மார்பளவு சிலையை நிருவி அதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோல் அனைத்து மாநில சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது உதகை படகு இல்லம் போன்ற பகுதிகளில் சாகச சுற்றுலாவை அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருமளவு உதகைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, படகு இல்லம் போன்ற சுற்றுலா மையங்களை மட்டுமே கண்டு ரசித்து சென்ற நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் நீலகிரியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சூழல் சுற்றுலா என்ற சுற்றுலாவை உருவாக்கி அவலாஞ்சி, கோடநாடு காட்சி முனை, பயின் சோலை, போன்ற புதிய சுற்றுலா மையங்களை திறந்து வைத்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அத்துடன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் போது முகம் சுளிக்காமல் இருக்க சாலைகள் அனைத்தும் தரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சுற்றுலாப் பயணிகளையும் இளைஞர்களையும் கவரும் வகையில் உதகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் விரைவில் கேபிள் கார் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் யானைகளுக்கு உணவு அளிப்பதை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி நீலகிரி முழுவதும் சுற்றிப்பார்க்க சிறப்பு சுற்றுலா காவல்துறையினர் நியமிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சிறப்பான திட்டங்களால் இனிவரும் காலங்களில் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தி மேலும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகளை நீலகிரிக்கு ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர கூடாது எனவும் இயற்கையையும் இயற்கை சார்ந்து வாழும் வன விலங்குகள், பறவைகளை பாதுகாக்க சாலையோரங்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதை தவிர்க்க வேண்டுமெனவும் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: “செம குளிர்.. மினி காஷ்மீர் போல் மாறிய நீலகிரி” : உறைபனி சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் குதூகலம்!