Tamilnadu

“லட்சோபலட்சம் தொண்டர்களின் உதிரத்தால் உருவானவன் நான்.. நாற்பதும் நமதே, நாடும் நமதே!”: முதலமைச்சர் சூளுரை!

திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகரில் கலைஞர் - அண்ணா அரங்கில் கழக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கினார்.

இந்நிலையில், இவ்விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முரசொலியில் உடன்பிறப்புகளுக்குக் எழுதிய கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் “திராவிட மாடல் ஆட்சி தொகுப்பு” என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சிறப்பித்தார்.

விருதுகள் பெறுவோர் இம் “முப்பெரும் விழா”வில் முத்தாய்ப்பு விருதுகள் வழங்குவது தான். 1. திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2. கோவை திரு. இரா.மோகன் அவர்களுக்கு ‘அண்ணா விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

3. கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்களுக்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

4. புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு அவர்களுக்கு, ‘பாவேந்தர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

5. குன்னூர் சீனிவாசன் அவர்களுக்கு, ‘பேராசிரியர் விருது’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

பின்னர் விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கழக அடையாளமாய் கறுப்பு-சிவப்பு பார்டர் வைத்து வேஷ்டி தயாரித்தவர் அம்மையார் சம்பூர்ணம் சாமிநாதன். இவரைப் போல 10 சம்பூர்ணம் இருந்தால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது என்று கலைஞரே பாராட்டி இருக்கிறார். அவருக்கு பெரியார் விருது அளிப்பது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

சென்னை மாவட்டத்தில் தி.மு.கவை சிங்கம் போல வழிநடத்தியவர் டி.ஆர்.பாலு. தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தி.மு.க குரலை ஓங்கி ஒலிப்பவர். அவருக்கு கலைஞர் விருது அளிப்பது சரியான தேர்வு என நினைக்கிறேன்.

நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது, என்னை அழைத்துவந்து விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக அழைத்துச்சென்று கழகக்கொடி ஏற்ற வைத்த பெருமை குன்னூர் சீனிவாசனுக்கு உண்டு.

ரத்தம், வியர்வை, உழைப்பை கொடுத்து இந்த இயக்கத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் தொண்டுக்கான பாராட்டு அல்ல இது. எங்களின் நன்றியை காட்டுவதற்கான விழா. நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

அதுமட்டுமல்லாது 4,041 கடிதங்கள்.. 21,500 பக்கங்கள் - கலைஞரின் கடிதங்கள் தொகுப்பு நூலில் உள்ளது. உலகத்தில் இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதிய ஒரே தலைவர் கலைஞராகத்தான் இருக்க முடியும். இந்த நேரத்தில் சண்முகநாதன் இல்லையே என்கிற ஏக்கம் என்னை ஆட்கொள்கிறது.

திராவிடம் என்பது ஒரு காலத்தின் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கொள்கையாக இருக்கிறது.

“உயர்ந்தவர் தாழ்ந்தவர் - ஆரிய மாடல். எல்லாருக்கும் எல்லாம், அனைவரும் சமம் - இது திராவிட மாடல். மேலும் சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் சேர்க்கையே திராவிட மாடல் ஆகும்.

இந்திய அளவிலான தனிநபர் வருமானத்தை விட, தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகம். கல்வி, கல்லூரி, மருத்துவம் என அனைத்திலும் தமிழகம் முன்னோடி. இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. இதைத்தான் பெரியார் கனவு கண்டார். அண்ணா, கலைஞர் செய்துகாட்டினார்கள். அந்த கடமை இப்போது என் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.

தொண்டர்களால் ஆனவன் நான். லட்சோபலட்சம் தொண்டர்களின் உதிரத்தால் உருவானன் நான். ஆட்சியில் அமர்ந்திருப்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, உடன்பிறப்புகளால் ஆட்சியில் உட்காரவைக்கப்பட்டு இருக்கிறேன்.

ஒற்றைத்தன்மையையும், இந்தி திணிப்பையும் நம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி.எஸ்.டி, நீட் தேர்வுகள் மூலம் நம் நிதி, கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் சட்டங்கள் அனைத்தும் மக்கள் விரோத போக்கையே கொண்டுள்ளன.

ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறார்கள். இவற்றைத் தடுக்க நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். அதற்கான களப்பணிகளை இப்போதே தொடர வேண்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே !” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தி.மு.க முப்பெரும் விழா : முத்தாய்ப்பு விருதுகள், பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!