Tamilnadu

”பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வேன்”.. ராகுல் காந்தி உறுதி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தைக் கன்னியாகுமரியில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கினார். இவரின் இந்த நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று 3வது நாள் நடை பயணமாக நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி 18 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்கிறார்.

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி," காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் ஒற்றுமைக்காக இந்த நடை பயணத்தில் பங்கேற்பது எனது கடமை. நடை பயணத்தில் நான் பங்கேற்பதில் முரண்பாடு எதுவும் இல்லை.

பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காகவே இந்த பயணம் மேற்கொண்டுள்ளேன். சிபிஐ, வருமானவரித்துறை அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தியா என்ற பன்முகத்தன்மை வாய்ந்த கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க அரசின் குறிக்கோள். பா.ஜ.கவின் இத்தகைய செயல்பாடுகளை ஒரு சிலர் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நடை பயணத்தில் குழந்தைகளிடம் நான் உரையாற்றியபோது அவர்கள் கூறிய ஒன்றால் நான் கவரப்பட்டேன். அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதே இந்தியா என்று குழந்தைகள் கூறினர். ஆனால் தற்போது நாட்டில் நல்லிணக்கம் என்பதே இல்லை.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம். இதற்கான பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. தமிழ் அழகான மொழி. நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read: ”கீர்த்தி அல்ல மூர்த்திதான் பெரிது”.. அமைச்சர் மூர்த்தியை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!