Tamilnadu

பூட்டை உடைத்து 281 பவுன் நகை கொள்ளை.. வடமாநில கும்பல் கைது: போலிஸார் துப்பு துலக்கியது எப்படி?

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி புதூர் கிராமத்தில் ஸ்ரீ குமரன் சொர்ண மஹால் நகைக்கடை உள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி இக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 281 பவுன் நகை, 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் இதுகுறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன், டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் மற்றும் போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

அப்போது கிராமத்தின் அருகே சோளக்காட்டுப் பகுதியில் நகைப் பெட்டிகள் மற்றும் பைகளைக் கொள்ளையர்கள் வீசிவிட்டுச் சென்றது தெரிந்தது. அங்குச் சென்றுபார்த்தபோது மூக்குத்திகள், வளையங்கள் அப்பகுதியில் இருந்ததை போலிஸார் கண்டனர். இப்பகுதியில் வைத்து நகையை பிரித்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி புகழேந்தி கணேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நகைக்கடை அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனங்களின் தடயத்தைக் கொண்டு போலிஸார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்தனர்.

அதன்படி மகாராஷ்டிர மாநிலம் புனாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று குடும்பத்துடன் புதுச்சேரியில் தங்கி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. பூனா மாவட்டத்தைச் சேர்ந்த லாலாஃபூலா ரத்தோட், ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட், அஜய்பகவான் நானாவத், மற்றும் சர்னால் மத்யா நானாவத் ஆகியோர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை போலிஸார் உறுதி செய்தனர்.

இதையடுத்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த லாலாஃபூலா ரத்தோட், அஜய்பகவான் நானாவத், மற்றும் சர்னால் மத்யா நானாவத் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1510 கிலோ தங்க நகைகள், 17 கிலோ வெள்ளிப் பொருட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கொள்ளையடித்த நகைகளில் 20 கிராம் நகைகள் புதுச்சேரியில் உள்ள கடையில் விற்பனை செய்ததையும் போலிஸார் கண்டுபிடித்து அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறனர். அதேபோல் தலைமறைவாக உள்ள ராமதாஸ் குலாப்சிங், ரத்தோட் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Also Read: சிறுமிகளுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட மடாதிபதி :கர்நாடகாவில் பரபரப்பு