Tamilnadu

கள்ளக்குறிச்சி கலவரம் : பள்ளி வாகனம் மீது டிராக்டர் கொண்டு இடித்த இளைஞர் சரண் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் கலவரமாக மாறியதில், அந்த பள்ளியிலுள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்கள் சூறையாடபட்டது.

இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். பின்னர் இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு டி.ஜி.பி உத்தரவிட்டார். அதோடு இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கலவரக்காரர்களையும் கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்பாக போலி தகவல்களை பரப்பியதாக கூறி சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் வீடியோக்கள் மூலம் கலவரத்தில் ஈடுபட்டோரை தீவிரமாக தேடி வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் 6 பேரை கைது செய்துள்ளனர் .

இந்த நிலையில், தற்போது அந்த கலவரத்தின்போது பள்ளி வாகனத்தை டிராக்டர் கொண்டு இடித்து சேதப்படுத்திய நபர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த அவர், சின்னசேலம் அருகேயுள்ள பங்காரம் என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் (வயது 22) என்று தெரியவந்துள்ளது.

தற்போது கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார்.