Tamilnadu

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து.. தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கைது - போலிஸில் சிக்கியது எப்படி !

சினிமாவில் ஸ்ட்ண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் கனல் கண்ணன் பா.ஜ.கவில் இணைந்தார். இதையடுத்து இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கலந்துக்கொண்டு பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சையான கருத்ததை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கனல் கண்ணன் சர்ச்சையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ட்ண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட அன்றே கனல் கண்ணன் தலைமறைவானதால் போலிஸார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். மேலும் கனல் கண்ணன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் போலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பாண்டிச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் கனல் கண்ணன் தலைமறைவாக இருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் பாண்டிச்சேரிக்கு விரைந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணணை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணையில் போலிஸார் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து.. பிரபல ஸ்ட்ண்ட் மாஸ்டர் மீது வழக்குப் பதிவு!