Tamilnadu
“அது ஒரு வழிப்பாதையல்ல.. பாஜகவினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல்”: எச்சரிக்கை விடுத்த துரைமுருகன்!
மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய பா.ஜ.க.வினரின் அறுவறுக்கத்தக்க - அரசியல் பண்பாடற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், இச்செயலின் மூலம் பா.ஜ.க.வின் 'நாட்டுப்பற்று' சாயம் வெளுத்துப்போய் இருக்கிறது என்றும் கழகப் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கழகப் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்களின் அறிக்கை வருமாறு:
75 ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இது போன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச்செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒரு வழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.
ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடிவிடலாம் என்று தமிழ்நாட் டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம். இராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி உயிரிழிந்த இராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத்துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் "நாட்டுப்பற்று” சாயம் வெளுத்துப் போயிருக்கிறது.
செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிரவேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.
ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்தகாரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள் தூண்டிவிட்டவர்கள் - துணைபோனவர்கள் ஆகியோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Also Read
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!
-
ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது சரியான அரசியல் முடிவு : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு!
-
"ஓ.பன்னீர்செல்வம் வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!