Tamilnadu

FED வங்கியில் ரூ.20 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை.. ஊழியரே கைவரிசையை காட்டியது அம்பலம் !

ஃபெடரல் வங்கியின் ஒரு பகுதியான ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன்ஸ் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகைகளுக்கான நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை, அரும்பாக்கம் பகுதியிலுள்ள இந்த வங்கியின் கிளையில் தற்போது ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரித்தபோது, இந்த கொள்ளை சம்பவத்தை அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியரே நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது அந்த வங்கியில் மொத்தமாக 4- 5 பேர் தான் பணிபுரிந்து வருகின்றனர். இதனை நன்றாக அறிந்த அதே வங்கியில் பணிபுரியும் ஊழியரான முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த வங்கிக்கு வந்துள்ளார். அப்போது வங்கியின் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.

அவர் மயக்கமடைந்ததும், கட்டிப்போட்டு விட்டு வங்கியின் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சுமார் ரூ.20 கோடி மதிப்பு பெரும்.

இதையடுத்து தற்போது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முருகனின் புகைப்படம் வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் இருக்கும் காவல்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு கூறியபோது, "இதே வங்கியில் தற்போது வரை வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்ற ஊழியர் தான் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டோம். வங்கியில் வேலை செய்யும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது விரைவில் கண்டறியப்படும்.

கொள்ளையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்துவிட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதும், குற்றவாளிகளை பிடிப்பதும் எளிமையானது தான். கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

Also Read: "எங்களுக்கு தெய்வமா எங்க முதலமைச்சர் இருக்காரு.." - கல்லூரி விழாவில் முதலமைச்சரை புகழ்ந்த மாணவர் !