Tamilnadu
எழுத்தாளர் வாழ்க்கைக்கும் அவர்கள் எழுத்துக்கும் வித்தியாசம் இருக்குமா?.. இவர்களை புரிந்து கொள்வது எப்படி?
எழுத்தாளனுக்கும் அவனது எழுத்துக்கும் வித்தியாசம் இருக்குமா?
எழுதுபவன் என்கிற முறையில் சொல்கிறேன், நிச்சயமாக இருக்கும்.
எழுதுபவன் என்றும் தான் விரும்பும் வாழ்க்கையைத்தான் எழுதுகிறான். தான் வாழ விரும்பும் உலகைத்தான் காட்ட விரும்புவான். அது அவன் வாழும் உலகமாக இருக்காது. அதில் இருப்பவனும் முற்றிலும் அவனாகவும் இருக்க மாட்டான்.
ஓரளவுக்கு பொருந்தி போகலாம். அல்லது முற்றிலும் பொருந்தாமலும் போகலாம். ஆனால் நிச்சயமாக நூற்றுக்கு நூறு சதம் பொருந்திப் போகும் வாய்ப்பு இருக்காது. அப்படி பொருந்தினால், அவன் எழுதவே மாட்டான். ஏனெனில் அவன் விரும்புவதற்கும் காட்டுவதற்கும் புதிதாய் ஓர் உலகம் தேவைப்படாது.
அவன் தோற்கும் தருணங்களை ஜெயிப்பதாக காண்பிப்பான். இழந்த உறவுகளை மீண்டும் உருவாக்குவான். இல்லாத சுபாவங்களை இருக்க வேண்டுமென்ற ஆசையோடு எழுத்தில் வடிப்பான். அதனால்தான் எழுத்து எழுத்தாளனை முழுமை ஆக்குகிறது. எழுத்தின்றி அவன் அரைகுறை. அந்த மீதி அரையில், இல்லாத குறையைத்தான் எழுத்தால் நிரப்பி நிறையாக்குகிறான்.
இதுபுரியாமல் பலர் எழுத்தை வைத்து எழுத்தாளனை எடை போடுகிறார்கள். எனக்கும் இதுதான் நிலை.
சரியாக ஓர் எழுத்தாளனை புரிய வேண்டுமானால், அவன் எழுத்தில் வலியுறுத்தும் அறம் அனைத்தையும் கழித்துவிட்டு பாருங்கள். அப்போது கிடைப்பவன் தான் அந்த எழுத்தாளன். அதற்காக அவன் வழக்கமானவன் என்று சொல்லிவிட முடியாது. அந்த அறங்கள் தன்னிடம் இல்லை என்ற புரிதலாவது குறைந்தபட்சம் அவனிடம் இருக்கும். அல்லது அந்த அறங்களை வெல்லும் பயணத்திலாவது இருப்பான்.
காதலை அற்புதமாகக் கொண்டாடி எழுதுபவன், அதை அடைய முடியாதவனாக இருப்பான். அல்லது அடைந்து இழந்தவனாக இருப்பான். இச்சமூகத்தில் சமத்துவம் வேண்டுபவன், அதை வலியுறுத்தும் கதைகளையே எழுதுவேன். கிடைக்காத நியாயங்களுக்காகவே எழுத்துகள் எழுதப்படுகின்றன. அடையப்படாத உலகத்துக்காகவே தத்துவங்கள் ஆக்கப்படுகின்றன. எட்டாத உயரங்களுக்காகவே நம்பிக்கைகள் தீட்டப்படுகின்றன. அடைய முடியாத நிம்மதியே வார்த்தைகளை நிறைக்கின்றன.
எல்லாக் காலங்களிலும் கலையின் திசை எதிர்காலமாகவே இருந்திருக்கிறது. கடந்த கால அனுபவங்களின் மையை நிகழ்கால பேனாவில் நிரப்பி எழுதப்படும் எழுத்துகள் யாவும் எதிர்காலத்துக்கானவை மட்டுமே. அந்த எதிர்காலத்தில் அவற்றை எழுதிய எழுத்தாளன் இல்லாமல் கூடப் போகலாம். ஆனால் அவனது எழுத்தும் எழுத்தின் மையும் காலம் தாண்டியும் நின்று பேசும்.
ஓய்வொழிச்சலின்றி சுற்றிக் கொண்டிருக்கும் காலச்சக்கரத்துக்கு எழுத்தாளர்கள் சிந்தும் மையே எரிபொருள். அவர்கள் நிகழ்காலத்தில் நின்று கொண்டு எதிர்காலத்தைத் தீட்டும் ஓவியர்கள். இல்லாத யதார்த்தத்தில் இருந்து அற்புதமான கனவுக்கான உலகத்தை எதிர்காலத்தில் கட்டுபவர்கள் எழுத்தாளர்கள்.
காலத்தின் கனவுகளே எழுத்தாளர்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!