Tamilnadu

“ஏழைகளுக்கு ஒரு நீதி.. சாஸ்திராவுக்கு மட்டும் பாரபட்சம் காடும் ஐகோர்ட்” : கொந்தளிக்கும் கே.பாலகிருஷ்ணன்!

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஒதுக்கிய நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க தயாராக இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைக்கழகம் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு இதுகுறித்து பதிலளிக்க கோரி, 24ம் தேதி வரை வழக்கை தள்ளி வைத்தார். இந்நிலையில் சாஸ்தா பல்கலைக்கழக வழக்கில் நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வாழ்விட உரிமையும், ஆக்கிரமிப்பும் : ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே?!

தமிழகத்தில் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து சொந்தமாக கட்டிய ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் எனவும், அதை அமல்படுத்த மறுக்கிற அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கடுமைகாட்டுகிறது.

ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிப்பதால் கண்ணீரும் கம்பலையுமாக அலைகிற காட்சிகள் மனிதநேயம் உள்ள அனைவரையும் உலுக்கி எடுக்கின்றன.

ஆனால் நீதிமன்றம் அந்த அழுகுரல்களை கேட்கவோ அல்லது அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என உத்தரவிடவோ கூட மறுக்கிறது. இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளும் நீதிமன்றம் தஞ்சாவூரில் உள்ள சாஸ்தா பல்கலைக்கழக வழக்கில் செய்வது என்ன?

அரசுக்கு சொந்தமான 31 ஏக்க நிலங்களை ஆக்கிரமித்து கல்லூரி கட்டிடங்களை கட்டியுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம், கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகிறது. அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளது.

உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவை அமலாக்க சொல்லியிருக்க வேண்டும், மாறாக சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசு தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் வரை வழக்கு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.

சாதாரண ஏழை எளிய மக்களிடம் கடுமையும், சாஸ்திரா பல்கலைக்கழகத்திடம் மென்மையும் கடைப்பிடிக்கும் இந்த பாரபட்சம் ஏனோ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதில் மாற்று இடத்தை ஏற்க முடியாது..” : ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!