Tamilnadu

“ரஜினி - ஆளுநர் சந்திப்பு; ஆளுநர் மாளிகையா ? - அரசியல் அலுவலகமா?” : கொதித்தெழுந்த கே.பாலகிருஷ்ணன்!

பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் ஆளுநர்கள் மூலம் மாநிலங்கள் மீது தொடர்ச்சியாக பல்வேறு தலையீடுகளை ஒன்றிய பா.ஜ.க அரசு மேற்கொண்டுவருகிறது.

அந்தவகையில், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, தெலுங்கானாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநர் மூலம் தனது வேளையை பா.ஜ.க செய்துவருகிறது. ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்தற்கு கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே.

ஆனால், அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது.

அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொருத்துக்கொள்ளப் போகிறோம்?” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “குருட்டுப் பூனை விட்டத்தில் தாவியதைப் போல் அம்மையார் தவிப்பதேன்?” : ஆளுநர் தமிழிசைக்கு சிலந்தி பதிலடி !