அரசியல்

“குருட்டுப் பூனை விட்டத்தில் தாவியதைப் போல் அம்மையார் தவிப்பதேன்?” : ஆளுநர் தமிழிசைக்கு சிலந்தி பதிலடி !

தாய்மொழித் தமிழை அழித்து விடும் வகையில், இந்தி ஆதிக்கம் செலுத்தும் நவோதயா பள்ளிகளுக்கு வக்காலத்து வாங்கி நிற்கிறார்.

“குருட்டுப் பூனை விட்டத்தில் தாவியதைப் போல் அம்மையார் தவிப்பதேன்?” : ஆளுநர் தமிழிசைக்கு சிலந்தி பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலிக்கு பதிலளிக்கப் புறப்பட்ட மேதகு புதுவை ஆளுநர் தமிழிசை, பந்தை தடம் மாறி உதைத்து "சேம் சைட் கோல்' போட்டுள்ளார்!

'மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டிய பட்டமளிப்பு விழாக்களை அரசியலாக்கு வது தவறு" - என்று குறிப்பிட்டு, சமீபத்தில் மதுரையில் நடந்த பட்டமளிப்பு விழாவை கல்வி அமைச்சர் புறக்க ணிக்குமளவு அரசியலாக்கிவிட்ட தமிழ்நாடு ஆளுநர் ரவி மீது ஒரு தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

தெருவோரக் குடிமகனுக்கும் அரசியலமைப்பின்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை சிலர் மொழி வெறி கொண்டு தடுப்பதாகக் குறிப்பிட்டு, இந்தி மொழி வெறயோடு செயல்படும் பா.ஜ.க.வினரைப் பந்தாடுகிறார்!

"தமிழ் என் பெயரில் மட்டுமல்ல; உயிரிலும் இருக்கிறது" என்று கூறிக் கொண்டு. தாய்மொழித் தமிழை அழித்து விடும் வகையில், இந்தி ஆதிக்கம் செலுத்தும் நவோதயா பள்ளிகளுக்கு வக்காலத்து வாங்கி நிற்கிறார்.

அவர் பெயரிலேயே தமிழ் இருப்பது போல அந்தப் பள்ளியின் பெயரே இந்தியில் இருப்பதை மறந்து, இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசால் நிறுவப்பட்டுள்ள பள்ளியை பெயரிலும், உயிரிலும் தமிழ் இருப்பதாக மார்தட்டிக் கொள்ளும் அவர் ஏன் தாங்கிப் பிடிக்கிறார்?

“குருட்டுப் பூனை விட்டத்தில் தாவியதைப் போல் அம்மையார் தவிப்பதேன்?” : ஆளுநர் தமிழிசைக்கு சிலந்தி பதிலடி !

'நவோதயா பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கு மேல் பயிற்சி மொழியாக தமிழ் இல்லையே! ஆங்கிலத் தோடு இந்திக்கு மட்டும்தான் அங்கு இடம்' - ஆளுநர் தமிழிசையின் பெயரிலும், உயிரிலும் இருக்கும் அந்த தமிழ் இல்லையே என்று போர்க்குரல் எழுப்பியிருந்தால், நாம் அம்மையார் இன்று உதிர்க்கும் வீரவசனங்களைக் கைதட்டி வரவேற்றிருப்போம்.

திருமதி தமிழிசையின் பதிலைப் படிக்கும் போது அவர் புரிந்தும் புரியாமல் பேசுகிறாரா அல்லது புரியாமலேயே புரிந்தது போலப் பேசுகிறாரா என்பது விளங்கவில்லை !

நாட்டிலே இந்தித் திணிப்பே இல்லை; அமாவாசை இரவில் கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு, இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போல, இல்லாத இந்தித் திணிப்பை வைத்து மக்களை ஏமாற்றலாமா என்று ஆளுநர் திருமதி தமிழிசை கேட்டுள்ளார்; பாவம்; பதவி மோகம் அவரது கருத்தை மட்டுமல்ல; கண்ணையும் மறைத்து விட்டது போலும்!

எங்கே இந்தித் திணிப்பு என்று பூனைக் கதை கூறி கேட்டிடும் அம்மையாரே,

இந்திய நாடாளுமன்றம் இந்தி மொழி வெறியர்களால் இந்தி நாடாளுமன்றமாக மாற்றப்பட்டு வருகிறதே, அது என்ன இல்லாத கருப்புப் பூனையா? கேள்வி நேரங்களில் துணைக் கேள்விகள் கேட்கப்படும் போது கூட அமைச்சர்கள்; அதுவும் ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள், இந்தியிலேயே பதில் தருவதால் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை எதிர்கொள்வதைப் பார்க்கவில்லையா? அது என்ன இல்லாத கருப்புப் பூனையா?

“குருட்டுப் பூனை விட்டத்தில் தாவியதைப் போல் அம்மையார் தவிப்பதேன்?” : ஆளுநர் தமிழிசைக்கு சிலந்தி பதிலடி !

ஒன்றிய அரசின் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து தரும் தகவல்கள் பெரும்பாலும் இந்தியிலேயே சமீப காலங்களில் தருவதை அம்மையார் அறியாதவரா?

சமீபத்தில் தேசிய அளவிலான திரைப்பட விருதுகளை அறிவித்த நிகழ்வும் இந்தியில்தானே நடை பெற்றது! அது என்ன இல்லாத கருப்புப் பூனையா? அல்லது கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டு விட்டது என்று கூறும் கதையா? இவைகள் எல்லாம் எந்த ரகம்; குருட்டுப் பூனை விட்டத்தில் தாவியதைப் போல் அம்மையார் தாவித் தவிப்பதேன்?

“தமிழிசை இந்தியிசையாகலாமா?" எனக் கேள்வி எழுப்பி முரசொலியில் வெளிவந்த கட்டுரையின் அடித்தளமே, “தமிழ்நாடு அரசு நவோதயா பள்ளிகளைத் திறப்பதைத் தடுப்பதேன்? நவோதயா பள்ளிகளில் எங்கே இந்தித் திணிப்பு இருக்கிறது என புதுவை ஆளுநர் எல்லை தாண்டி வந்து தமிழ்நாட்டில் மூக்கை நுழைப்பதேன்? என்ற கேள்விகள்தான்.

நவோதயா பள்ளிகள் தொடங்கியதன் நோக்கமே நாடு முழுதும் இந்தியைப் பரப்புவதுதான். எந்த சமூக நீதிக்காக ஆண்டாண்டு காலமாகப் போராடி வருகிறோமோ, அதனை உடைத்தெறியும் அஸ்திரம்தான் நுழைவுத்தேர்வு!

அந்த நுழைவுத் தேர்வின் மூலம் தான் நவோதயா பள்ளிகளில் அனுமதி என்றால், ஏழை எளிய படிப்பறிவில்லா மக்கள் வீட்டுச் செல்வங்கள் அந்தப் பள்ளிகளில் நுழைய எப்படி வாய்ப்பு கிடைக்கும்?" - எனக் கேட்டிருந்தோம்; அது குறித்து, பக்கம் பக்கமாக முரசொலிக்குப் பதிலளித்த அம்மையார் வாய்திறக்கவில்லை.

"எட்டாம் வகுப்பு முதல், பாடங்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் பயிற்றுவிக்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், நவோதயா பள்ளிகளில் இந்தித் திணிப்பு எங்கே என்று கேட்பது அறியாமையின் உச்சமல்லவா?" - எனக் குறிப்பிட்டிருந்தோம்.

“குருட்டுப் பூனை விட்டத்தில் தாவியதைப் போல் அம்மையார் தவிப்பதேன்?” : ஆளுநர் தமிழிசைக்கு சிலந்தி பதிலடி !

மேதகு ஆளுநர் அதற்கெல்லாம் பதிலளிக்காது, எதிரிகளைத் தாக்குவதாக நினைத்து, தன் நிழலோடு சிலம்பமாடியிருக்கிறார். நவோதயா பள்ளியில் படிப்பதால் மருத்துவராகும் வாய்ப்பை ஏழை எளிய மக்கள் பெறுகின்றனர் எனத் தன்னை மறந்து பேட்டி தந்துள்ளார் திருமதி தமிழிசை!

அவர் மருத்துவம் படித்து மருத்துவராக சில காலம் பணியாற்றியவர். அவர் தமிழ்நாட்டில் எந்த நவோதயா பள்ளியில் படித்து, அதனால் "நீட்' எழுதி மருத்துவராகும் வாய்ப்பைப் பெற்றார்?

அவரைப் போன்று அடித்தளத்து மக்கள் ஆயிரக்கணக்கில் மருத்துவர்களாகி அகில இந்திய அளவில் மட்டுமின்றி - நாடு கடந்தும் புகழ்மிகு மருத்துவர்களாக விளங்குகிறார்களே! அவர்களெல்லாம் எந்த நவோதயாவில் படித்தார்கள்?

நவோதயா பள்ளியில் படிப்பதால் மருத்துவராகும் வாய்ப்பை ஏழை எளிய மக்கள் பெறுகின்றனர் என்று கூறும் தமிழிசை இதற்கு பதிலளிப்பாரா?

நுழைவுத் தேர்வு வேண்டும் என்று வாதிடும் அம்மையார், தான் எந்தத் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவரானார் என்பதையும் விளக்கினால் நல்லது; அவர் படித்த காலத்தில் நீட்' போன்ற நுழைவுத் தேர்வு முறை இருந்திருந்தால், அவரே தேர்ச்சி பெற்றிருக்க முடியுமா? என்ற கேள்வியை, அவர் மனசாட்சியிடம் கேட்டு பதிலளிக்கட்டும்!

நவோதயா பள்ளியில் படிக்காமல், 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழிசையை நாம் சிறந்த மருத்துவராகத் தான் கருதினோம். ஒருவேளை அவர் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக வாதிட்டு. நமது கருத்தை தவறானது என்பாரா?

இந்திக்கும், இந்தித் திணிப்புக்கும் ஆதரவாக அம்மையார் தொடர்ந்து வாதிட்டால், அவரை இந்தியிசை என அழைப்பதில் அவருக்கு உள்ளுக்குள் ஆனந்தம் இருக்கும் என எண்ணிடத் தோன்றுகிறது. நமக்கு பதில் சொல்லுவதாக நினைத்து, “நான் இந்தியிசையாக மாறமாட்டேன்" எனப் பேசி, பி.ஜே.பி.யில் உள்ள இந்தி வெறியர்களின் கோபத்துக்கு அம்மையார் ஆளாகி, அதனால் வகிக்கும் பதவிக்கு ஆபத்து வர வழிவகுத்துக் கொள்ளாமல் இருப்பது நலம்.

- சிலந்தி

Related Stories

Related Stories