Tamilnadu

போலிஸ் விசாரணை என அழைத்துச் சென்று 5 லட்சம் பணம் பறிப்பு.. பெங்களூரு கும்பலை மடக்கி பிடித்த தமிழக போலிஸ்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் தங்கம் (55). இவர் கோவில்பட்டி இளையரசனேந்தல் சுரங்க பாலம் அருகே பாத்திரக்கடை மற்றும் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது டிப் டாப்பாக உடை அணிந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தாங்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்றும் உங்கள் மீது திருட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த வழக்கு பதிவாகி உள்ளது அதற்காக விசாரணைக்கு வர வேண்டும் என அழைத்துள்ளனர்.

தான் எந்த திருட்டுப் பொருளையும் வாங்கி விற்கவில்லை என தங்கம் மறுத்துள்ளார். இருப்பினும் அவரை வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றி கொண்டு கோவில்பட்டியில் இருந்து கரூர் வரை சென்றுள்ளனர். காரில் செல்கையில் உன் மீது வழக்குப்பதியாமல் இருக்க 20 லட்சம் ரூபாய் தந்தால் விடுவித்து விடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

தங்கம் தர மறுத்துள்ளார். இதையடுத்து பேரம் பேசிய நபர்கள் கடைசியாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக விட்டு விடுவோம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கம் கோவில்பட்டியில் உள்ள தனது மகனை தொடர்பு கொண்டு 5 லட்சம் ரூபாய் கொண்டுவரச் சொல்லி தெரிவித்துள்ளார்.

5 லட்ச ரூபாய் உடன் விருதுநகர் பைபாஸ் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து பணத்தை ஒப்படைத்ததும் அங்கு தங்கத்தை இறக்கி விட்டு விட்டு அந்த டிப்டாப் நபர்கள் சென்று விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட தங்கம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி‌‌னர். அந்த கார் கரூர் டோல்கேட் அருகே கடந்து செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கரூர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த கார் சுற்றி வளைக்கப்பட்டது.

காரில் இருந்த பெங்களூர் விஜயநகரை சேர்ந்த பரன் கவுடா, தாஸ், டேனியல், பவுல், பெரோஸ் கான் ஆகிய ஐந்து பேரை போலிஸார் கைது செய்தனர். கைதான ஐந்து பேரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு அவர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுக்கு முந்தைய தங்க கிரீடம் கண்டுபிடிப்பு”: செல்வ செழிப்புடன் வாழ்ந்த தமிழர்கள்!