Tamilnadu

கள்ளக்குறிச்சி வன்முறை: காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்தவர், பள்ளி கட்டடத்தை இடித்தவர் அடுத்தடுத்து கைது!

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.

இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலை தளத்தில் பதிவிட்ட பலரை தமிழகமெங்கிலும் போலிஸார் கைது செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் போலியான தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 32 யூடியூப் பக்கங்கள், சமூக வலைத்தள பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலிஸார் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து கலவரத்தில் எரிந்த நிலையில் இருந்த சி.சி.டி.வி ஹாட் டிஸ்க்குகளை கைப்பற்றியுள்ள போலிஸார் அதில் உள்ள காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது பள்ளி கட்டடத்தை இடித்து சேதப்படுத்திய கடலூர் வண்டி பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்ததாக வசந்த் என்பவர் நேற்று கைதான நிலையில் வீடியோ ,போட்டோ ஆதாரங்களை கொண்டு கைது நடவடிக்கைகள் தற்போது தீவிரபடுத்தப்பட்டு வருவதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: பண்ணை வீட்டில் பாலியல் தொழில்.. கைப்பற்றப்பட்ட கணக்கில்லாத ஆணுறைகள் - தப்பிக்க முயன்ற பாஜக தலைவர் கைது!