Tamilnadu
'நான் முதல்வர் பேசுறேன்'.. CM Call-ல் இருந்து வந்த அழைப்பால் நெகிழ்ந்த பயனாளிகள்!
சென்னை, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் அழைப்பு மையத்தினை (CM Help Line Call Centre) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்று அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக, வீட்டுமனைப் பட்டா பெற்ற அடையாறு பகுதியைச் சேர்ந்த பயனாளியிடமும், முதியோர் ஓய்வூதியம் பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளியிடமும் உரையாடினார்.
மேலும், குடும்ப அட்டை இடமாறுதல் கோரிய அம்பத்தூர், அயப்பாக்கத்தைச் சேர்ந்த பயனாளியிடம் பேசிய பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு உடனடியாக குடும்ப அட்டை மாறுதல் செய்து வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த பயனாளி விஜய கோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்துப் பேசியதில் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "1975ஆம் ஆண்டில் எனது மாமனாரால் நிலம் ஒன்று வாங்கப்பட்டது. அவர் இறந்தபிறகு 2000ஆம் ஆண்டில் மாமியார், என் மனைவி பெயருக்கு அந்த இடத்தை மாற்றினோம். பின்னர் மாமியார், மனைவி இருவரும் இறந்ததால் அந்த நிலத்தை என்னுடைய மகனின் பெயருக்கு கடந்த ஆண்டு மாற்ற முயன்றேன். ஆனால் நிலத்தின் பட்டாவில் எனது மனைவி மற்றும் மாமியார் பெயர் இல்லை.
உரிய சான்று கொடுத்து என்ன நடந்தது பட்டாவில் எப்படி பெயர் மாறியது என விசாரித்தபோது, 2016ஆம் ஆண்டில் பட்டா தகவல்களை கணினிமயமாக்கும் பணி நடந்தபோது, நிலத்தின் உரிமையாளர் பெயரை தவறாக பதிவு செய்துள்ளனர். இதையடுத்து மகனின் பெயருக்கு அந்த நிலத்தை மாற்றித்தர வேண்டும் என கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து புகார் மனு அளித்து வந்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. 50 முறைக்கு மேல் தாசில்தார் அலுவலகத்திற்கு அலைந்தேன்.
இந்நிலையில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்தேன். மேலும் முதலமைச்சரின் வீட்டுக்கு சென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் அலுவலர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். அது முதலமைச்சாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. மறுநாளே முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து என்னை தொடர்பு கொண்டார்கள். உரிய விவரங்களைக் கேட்டார்கள். நானும் அனைத்தையும் சொன்னேன்.பின்னர் விரைவாக அனைத்து பணிகளும் முடித்துக் கொடுக்கப்பட்டு, பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் முதலமைச்சரே தொலைபேசியில் தொடர்புகொண்டு அனைத்தும் சுமூகமாக முடிந்ததை கேட்டார். ஒரு பிரச்சனையை முடித்துக் கொடுத்ததோடு, அது சரியாக முடிந்துள்ளதா என்று என்னைப் போன்ற சாதாரண நபர்களிடம் கூட கேட்கும் அளவுக்கு கரிசனம் கொண்டவராக இருக்கிறார். அவர் சாதாரண முதலமைச்சர் இல்லை" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!