Tamilnadu

'Bus Day' கொண்டாட்டம்... மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த சென்னை காவல் ஆணையர் !

சென்னையில் ஆண்டுதோறும் 'Bus Day' கொண்டாட்டம் கல்லூரி மாணவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டம் ஆனது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கும்.

மேலும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த விழாவில், பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் தான் கெத்து என்பதை காட்டுவதற்காக பேருந்தின் மேல் ஏறி நின்று ஆடுவது, footboard அடிப்பது போன்ற செய்கைகளில் ஈடுபட்டு வருவர்.

இது போன்ற பஸ் டே, ரூட் தல கொண்டாட்டங்களைத் தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஆண்டுதோறும் பல மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பஸ் டே என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது அனைத்து கல்லூரிகளும் திறந்துள்ள நிலையில், கல்லூரிகளுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வன்முறை அல்லது அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஆகவே, ரூட் தல என்ற பெயரில் வன்முறை, மோதல் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பஸ் டே என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பேருந்து மற்றும் ரயில்களில் சாகசம் என்ற பெயரில் படிகளில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரைகளின் மீது ஏறி பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: Doctor to IPS ! தமிழ்நாட்டின் புதிய உளவுத்துறை IG செந்தில்வேலன் IPS யார்?