Tamilnadu

வழக்கம் போல் இயங்கிய தனியார் பள்ளிகள்.. அரசு பேச்சுவார்த்தையில் சுமூகம் - அறிவித்த ஸ்ட்ரைக் வாபஸ் !

கள்ளக்குறிச்சியில் நேற்று தனியார் பள்ளி மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ஒருசில சங்கங்கள் அறிவித்தன.

இதை தொடர்ந்து இன்று இயங்கிய பள்ளிகளின் பட்டியலை மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 91% தனியார் பள்ளிகள் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் 100% தனியார் பள்ளிகளும் இயங்கி உள்ளதாக மெட்ரிகுலேஷன் இயக்குனராகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 190 பள்ளிகளில் 31 பள்ளிகள் மட்டுமே இயங்கி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 216 பள்ளிகளில் 70 பள்ளிகளில் மட்டுமே இன்று இயங்கி உள்ளது. கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 167 தனியார் பள்ளிகளில் 153 தனியார் பள்ளிகள் வழக்கம் போல இயங்கி உள்ளது. சென்னையை பொறுத்தவரை 689 பள்ளிகளில் 684 பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கியுள்ளன இது மொத்தம் உள்ள பள்ளிகளில் 99 சதவீதம் ஆகும்.

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சி.பி.எஸ்.சி என மொத்தமாக 11335 தனியார் பள்ளிகளில் இன்று 10348 பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியுள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 89 சதவீதமும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95 சதவீதமும், சிபிஎஸ்இ பள்ளிகள் 86 சதவீதமும் இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 91% தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியுள்ளது என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: கள்ளக்குறிச்சி விவகாரம் : “மாணவர்களை வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை” : அமைச்சர் முக்கிய தகவல்!