Tamilnadu

10 ஆண்டு அடிமை அதிமுக ஆட்சியில் இதுமட்டும்தான் அதிகமாகி இருக்கு:வேதனையுடன் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.94,312 கோடி மேலும் அதிகரித்து ரூ.1.13,266 கோடியாக உயர்ந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, " தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை, 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இதன் விளைவாக, 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து தற்சமயம் (2021-22) வரை ரூ.1,59,823 கோடியாக உள்ளது. இதன் விளைவாக, கடந்த 20112012 ஆம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன் வாங்கிய நிதியின் வட்டியானது 259 % அதிகரித்து 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பெரும்பாலான மின் திட்டங்கள், அத்திட்டங்களுக்கான உரிய கால அட்டவணைக்குள் முடிக்கப்படாத காரணத்தினால் இத்திட்டங்களின் மூலதனச் செலவு கடுமையாக அதிகரித்ததுடன் கட்டுமானத்தின் மீதான வட்டி (Interest During Construction) ரூ.12,647 கோடியாக அதிகரித்துள்ளது.

சென்ற 10 ஆண்டுகளில், துணை மின் நிலையங்கள் மற்றும் மின் தொடரமைப்பு அமைத்தல் உள்ளிட்ட பல உள்கட்டமைப்புப் பணிகள் நீடித்தும், இது போன்ற திட்டங்களின் நிலைத் தன்மையைக் கருத்தில் கொள்ளாமலும், செலவின பலனின் மீது கவனம் செலுத்தாமல் பகுப்பாய்வு செய்ததின் காரணத்தினாலும் கடன் சுமை கடுமையாக அதிகரித்துள்ளது.

கடந்த 2011-2012 ஆம் ஆண்டில் ரூ.16,488 கோடிகளாக இருந்த மின் கொள்முதல் கட்டணம் 2020-2021 ஆம் ஆண்டில் 127 % அதிகரித்து ரூ.37,430 கோடிகளாக உள்ளது. அதேபோல், கடந்த 2011-2012 ஆம் ஆண்டில் ரூ.5,4628 கோடிகளாக இருந்த எரிபொருள்களுக்கான செலவுத் தொகை 2020-2021 ஆம் ஆண்டில் 21% அதிகரித்து ரூ.6610 கோடிகளாக அதிகரித்து உள்ளது. கடந்த, 2011-2012 ஆம் ஆண்டில், ரூ.4,125.20 கோடியாக இருந்த பணியாளர்களுக்கான செலவுத் தொகை 2020-2021 ஆம் ஆண்டில் 161% அதிகரித்து, ரூ.10,777.53 கோடியாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என அறிவித்த போதிலும், மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் அதிக விலைக்கு கடந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Also Read: மின் கட்டணத்தில் என்னென்ன மாற்றங்கள்? அமைச்சர் பேச்சில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் !