Tamilnadu
3வது இடத்தில் நான் படித்த கல்லூரி.. உயர்கல்வியில் ‘திராவிட மாடல்’ மாட்சிக்கு சிறந்த அங்கீகாரம்: முதல்வர்!
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள் ஆகியவை உள்ளடக்கிய தரவரிசை பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஒட்டுமொத்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள 100 கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி முதல் இடத்தை பெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும் இந்த தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள கோவை அம்ரிதா விஷ்வா வித்யபீதம் 16வது இடத்திலும், வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (வி.ஐ.டி.) 18வது இடத்திலும், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 21வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 22வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 24வது இடத்திலும் இருக்கிறது.
இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 4வது முறையாக ஒட்டு மொத்த தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அதேபோல், கல்லூரிகளின் தரவரிசையில் டெல்லி மிராண்டா ஹவுஸ் நிறுவனம் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. இதே வரிசையில் மாநிலக் கல்லூரி 3வது இடத்திலும், லயோலா கல்லூரி 4வது இடத்திலும் என சில கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சி நிறுவன தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டி. 2வது இடத்தையும், வி.ஐ.டி. 10வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 21வது இடத்தையும் பெற்றுள்ளது.
இன்ஜினியரிங் பட்டியலில், 100 கல்வி நிறுவனங்களில் முதல் இடத்தை சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 5வது முறையாக தக்க வைத்துள்ளது. இதில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 8வது இடத்திலும், வி.ஐ.டி. 12வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 17வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டிற்கான தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் NIRF தரவரிசைப் பட்டியல் 2022-இல் தத்தமது பிரிவுகளில் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்! அதுவும் இத்தரவரிசைப் பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமானது.
குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இச்சாதனைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்துக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!