Tamilnadu

"கடத்தல் அரசியல் செய்வது, பணம் கொடுத்து MLAக்கள் வாங்குவதுதான் BJP பழக்கம்" -யஷ்வந்த் சின்ஹா காட்டம்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், ஆதரவு கேட்பதற்காக இன்று சென்னை வந்த யஷ்வந்த் சின்ஹாவை அண்ணா அறிவாலயத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்

இந்த கூட்டத்தில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, "நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகாராஷ்டிராவில் ஒரு ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. அங்கு புதிதாக பொறுப்பேற்கும் அரசு நீண்ட நாள் நீடிக்காது என்பதால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்கவில்லை.

மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கும் அரசாக பா.ஜ.க அரசு செயல்படுக்கிறது. கடத்தல் அரசியலை பா.ஜ.க அரசு செய்துவருகிறது! கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்”

ஆளுநர்கள் என்பவர்கள் குடியரசு தலைவரின் பிரதிநிதிகள் மட்டுமே. அவர்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். ஆனால், பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் மோதல் போக்கை கொண்டு உள்ளனர்.

நான் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் ஆளுநர்கள் மாநில அரசுகளை மரியாதை குறைவாக நடத்துவதை அனுமதிக்க மாட்டேன். ஒன்றிய அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கடந்த காலங்களிலும் குரல் கொடுத்துள்ளேன். வரும் காலத்திலும் அவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும். அரசியலமைப்பின் ஒவ்வொரு கூறுகளையும் சிதைக்கும் வகையிலேயேஆளுநர்கள் செயல்படுகின்றனர்

தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான சிறப்பு உள்ளது. தமிழ்நாடு என்றும் தனது உரிமைக்கும், மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் போராடும் என்பது அனைவர்க்கும் தெரியும் . முன்னோர்கள் நமக்குக் கொடுத்தவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்தத் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ, ஒன்றிய அரசுக்கு எதிரான எனது போராட்டம் உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடரும்" எனத் தெரிவித்தார்.

Also Read: சாக்கடை கழிவு நீரில் தயாரான பீர் - முண்டியடித்து கொண்டு வாங்கும் பொதுமக்கள் : எங்கு தெரியுமா?