Tamilnadu

No Caste, No Religion.. வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வாங்கிய தம்பதி: நெகிழ்ச்சி சம்பவம்!

இந்தியாவில் சாதி சான்றிதழ் அவசியமான ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் கல்வியில் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என பலவற்றிற்கும் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. இதனால், குழந்தைகள் பிறந்த உடனே பெற்றோர்கள் சாதிச் சான்றிதழ்களை வாங்கி வைத்துவிடுவர். இந்நிலையில் சிவகாசியை சேர்ந்த தம்பதி ஒருவர் தங்களுக்கு சாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளது அனைவர் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். பட்டதாரி இளைஞரான இவர் கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்ற வர்கள் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

அப்போது, விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள், இதுவரை இப்படி சான்றிதழ் இந்த தாலுகா அலுவலகத் தில் யாருக்கும் கொடுத்தது இல்லை என கூறியுள்ளனர். அப்போது காத்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.

அதில் 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் காட்டியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகே யன், அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கி உள்ளனர்.

இது குறித்து கூறிய கார்த்திகேயன்," எனது சொந்த ஊர் சிவகாசி தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சாதி, மதம் அற்றவன் சான்றிதழ் கேட்டு மனு கொடுத்திருந்தேன். ஆனால் அப்போது இருந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பின்னர் சான்றிதழ் பெற தேவையான ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினேன். இணையத்தில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. கடந்த 2018 வழக்கறிஞர் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்று இருந்தார்.

இதை ஆதாரமாக வைத்து தற்போது எனக்கும், எனது மனைவிக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயமாக தொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியராக பணியாற்றி தற்போது விடுப்பில் உள்ளார். அடுத்து சில மாதங்களில் மீண்டும் உதவி பேராசிரியர் பணிக்கு செல்ல உள்ளார்.

எங்களுக்கு 2 குழந்தைகள் மூத்த மகன் நேசன் (4) தற்போது தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். மேலும் 2வது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயது தான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக. கோவையைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் வாங்கியுள்ளனர். தற்போது தம்பதி ஒருவரும் இதுபோன்று தங்களுக்கு சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘சாதி, மதம் கிடையாது..’ தனது மகளுக்கு ‘NO Caste’ சான்றிதழ் வாங்கி அசத்திய கோவை தம்பதி!