Tamilnadu

“சென்னை பாதுகாப்பானது தான்” : இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுநர் - காரணம் தெரியுமா?

"நிமிர்ந்த நன்னடை.. நேர்கொண்ட பார்வை" என்று பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப பெண்கள் பல துறைகளிலும் சாதித்து வருகின்றனர். குறிப்பாக வாகனம் ஓட்டும் தொழிலில் ஆண்களுக்கு இணையாக களத்தில் இறங்கி கலக்குகின்றனர். அப்படி ஒரு வேலை தான் பெண்கள் ஆட்டோ ஓட்டும் தொழில்.

பொதுவாக தமிழ்நாட்டில் பெண்கள் ஆட்டோ ஓட்டுவது என்பது புதிதல்ல. மாறாக பெண்கள் இரவு நேரத்தில் மட்டும் ஆட்டோ ஓட்டுவது தான் புதிது. அதுவும் சென்னையில் என்பது ஒரு சாதனை என்றே சொல்லலாம். அப்படி ஒரு சாதனையை தான் ஒரு பெண் தினமும் செய்து வருகிறார்.

சென்னையை சேர்ந்தவர் பெண் ஆட்டோ ஓட்டுநர் அபிபென்ஷா. இவருக்கு பார்வைக்குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி தாய் இருக்கும் நிலையில், இரவு மட்டுமே ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தும் ஒரு பெண்ணாக இருந்து வருகிறார்.

சுமார் 22 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வரும் இவர், தான் ஆட்டோ ஓட்டுவதில் இரவு நேரங்களுக்கே பிரதான முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், இரவு நேரங்களில் போக்குரத்து நெரிசல் சற்று குறைவாக இருப்பதால் ஆட்டோ ஓட்டுவதற்கு வசதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் சென்னை இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், தான் சாலிகிராமம், கே.கே.நகர், வடபழனி, கோவளம் உள்ளிட்ட பல இடங்களில் சவாரி ஏற்ற, இரக்க தனியே செல்வதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, 'OLA' மூலம் தான் வாடகை ஆட்டோ ஓட்டி வருவதாகவும், ஒரு சொந்த ஆட்டோ இருந்தால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் வசதியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தனக்கு பார்வை குறைபாடுள்ள ஒரு தாயும், தனது தம்பியின் மகளை தத்தெடுத்து வளர்ப்பதால், தான் இதுவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் சென்னையில் முதன்முதலில் ஆட்டோ ஓட்டும்பொழுது தனது ஆட்டோவில் பயணி ஒருவர் மறந்து வைத்து விட்டு சென்ற பொருளை வீடு தேடி சென்று கொடுத்ததால், அவர்கள் தன்னை வாழ்த்தியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இரவில் மட்டும் ஆட்டோ ஓட்டும் இந்த பெண் ஆட்டோ ஓட்டுநரின் செயல், அனைவரின் மத்தியில் பாராட்டையும் நம்பிக்கையையும் வரவைக்கிறது.

Also Read: மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி: 1,830 மடங்கு உயர்ந்த அதானியின் சொத்து - காங். குற்றச்சாட்டு!